சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு விளையாடிய வீரர் ஓய்வு அறிவிப்பு

ஆண்டிகுவா,

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதின. மழை காரணமாக 10 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 122 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நமீபியா 10 ஓவர்களில் வெறும் 84 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்காக விளையாடிய முன்னணி வீரரான டேவிட் வைஸ் அறிவித்துள்ளார்.

தற்போது 39 வயதை எட்டியுள்ள டேவிட் வைஸ், கடந்த 2013ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாலும், அங்கு தனக்கு போதிய வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் கடந்த 2021ஆம் ஆண்டு நமீபியா அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 15 ஒருநாள், 54 டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

இதில் ஒரு நாள் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 330 ரன்களையும், பந்துவீச்சில் 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். அதேசமயம் டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் 3 அரைசதங்களுடன் 624 ரன்களையும், பந்துவீச்சில் 59 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.