சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு – சற்று எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து

சென்னை: ஐஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு சற்று எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

நம் நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

அதன்படி நடப்பாண்டு 1,056 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி யுபிஎஸ்சி வெளியிட்டது. இதில் முதல்நிலைத் தேர்வெழுத நாடு முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் 79 நகரங்களில் நேற்று நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 7 லட்சம் பேர் வரை எழுதியதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் சென்னை உட்பட 5 நகரங்களில் நடத்தப்பட்ட தேர்வை 25 ஆயிரம் பேர் வரை எழுதியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

காலை முதல் தாள் தேர்வும் (பொது அறிவு), மதியம் 2-ம் தாள் (திறனறிவு) தேர்வும் நடைபெற்றது. தேர்வு மையங்களில் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. பலத்த பரிசோதனைக்கு பின்னரே தேர்வறைக்குள் பட்டதாரிகள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வை பொறுத்தவரை வினாத்தாள்கள் கடந்தாண்டை விட சற்று எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

மேலும், முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இரு வாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.