கிருஷ்ணகிரி: பர்கூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயல்பட்ட ஜவுளி மொத்த விற்பனைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 7 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன பர்கூரைச் சேர்ந்தவர் வடிவேல் (41). இவர் பர்கூர் ஜெகதேவி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து கடந்த ஓராண்டாக ஜவுளி மொத்தம் வியாபாரம் செய்து வருகிறார். மேலும், இங்கு விற்பனைக்குத் தேவையான ஜவுளிகளை இருப்பு வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வடிவேல், திருமண மண்டபத்தைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். இதனிடையே, நள்ளிரவு 12 மணியளவில் மண்டபத்திலிருந்து திடீரென கரும்புகை வெளியேறி தீப்பற்றி எரிந்தது.
தகவல் அறிந்து அங்கு வந்த பர்கூர் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ கட்டுக்குள் வராததால், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
நேற்று அதிகாலை 1 மணி முதல் காலை 8 மணி வரை போராடி தீயை, வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. தீ விபத்தால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால், அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து சேதமானதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக பர்கூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.பர்கூர் ஜெகதேவி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயல்பட்ட ஜவுளி மொத்த விற்பனை கடையில் ஏற்பட்ட தீயை தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.