கள்ளக்குறிச்சி: ஒருபக்கம் காவல்நிலையம் – மறுபக்கம் நீதிமன்றம் அருகேயிருந்தும் கள்ளச் சாராயத்தால் அதிகமான உயிர்களை இழந்த பகுதியான கருணாபுரம் சோகத்தில் ஆழந்துள்ளது. இங்கு வசிப்போர் பலரின் வாழ்க்கை மீண்டும் மாற பல ஆண்டுகளாகும் என்பது அவர்களது பேச்சில் தெரியவருகிறது.
தமிழகத்தில் நடந்த மோசமான சம்பவங்களில், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய இறப்புகள் முதன்மையான இடத்தைப் பிடிக்கின்றன. கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்துச் செல்லும் தொலைவில்தான் கருணாபுரம் உள்ளது. இதன் ஒருபகுதியில் நீதிமன்றமும், மறுபுறம் காவல்நிலையமும் அமைந்துள்ளன. தொடர்ந்து, இந்தப் பகுதியில் கள்ளச் சாராயம் விற்கப்பட்டதை அங்குள்ள குழந்தைகளே உறுதி செய்கின்றனர்.
தாத்தா காலத்தில் இருந்தே இங்கு விற்கிறார்கள் என்று தெளிவாக மழலை மொழியில் கள்ளச் சாராய விற்பனையைக் குறிப்பிடுகின்றனர். இங்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள், கட்டடப் பணியாளர்கள், பெயின்ட் அடிக்கும் பணிக்குச் செல்வோர் என உடல் உழைப்புத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களை குறிவைத்து பல ஆண்டுகளாக இயங்கி வந்தவர்கள், விற்பனை செய்து வந்த சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் இப்பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டன.
ஒரே குடும்பத்தில் நால்வரை இழந்த சுமை தூக்கும் தொழிலாளி முருகன் கூறுகையில், “எங்கள் பகுதியைச் சேர்ந்த 30 பேர் வரை இறந்துவிட்டனர். விலை குறைவாக ரூ. 60க்கு விற்றதால் பலரும் இங்கு சாராயம் வாங்குவார்கள். இது காலங்காலமாக நடந்து வருகிறது. எனக்கு 30 வயது, எங்க அப்பா காலத்தில் இருந்து விற்கிறார்கள். போலீஸூக்கே மாமுல் கொடுப்பார்கள். இதில், கட்சிக்காரர்கள், போலீஸாருக்கும் துணை இருக்கிறது. கடனுக்கும்கூட சாராயம் தருகிறார்கள். எங்கள் வீட்டில் அப்பா, அத்தை, மாமா, பாட்டி என நால்வர் இறந்துபோய் விட்டனர்.
காவல் நிலையம், பேருந்து நிலையம், கோர்ட் அருகிலேயே, காய்ச்சி விற்கிறார்கள். கவுன்சிலர் வீடு இங்குதான் இருக்கிறது. எம்எல்ஏ வீடும் இங்கதான் இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது. இங்கு சாராயம் விற்கக்கூடாது. பலரும் சாராயம் குடித்ததை முதலில் சொல்லவில்லை. அசிங்கப்படக்கூடாது என்பதால், அதைக்கூறாமல் விட்டுவிட்டனர். எத்தனை பேர் இன்னும் இறப்பார்கள் என்று தெரியவில்லை,” என்று சோகத்துடன் அவர் கூறினார்.
சுமை தூக்கும் தொழிலாளி சுப்ரமணி இறந்துபோன நிலையில் அவரது மனைவி அய்யம்மாள் கூறுகையில், “தினக்கூலி வேலை செய்து சம்பாதித்து, அதில் கள்ளச் சாராயம் வாங்கி குடிப்பார். இம்முறை உயிரே போய்விட்டது. எங்கள் வீட்டின் ஒரே ஆதாரமான கணவரை இழந்து விட்டு எங்கள் வாழ்க்கை என்னவாகும் என தெரியவில்லை,” என்கிறார் கண்ணீருடன்.
கள்ளத்தனமாக சாராயம் 250 மிலி பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் சர்வசாதாரணமாக விற்றனர். புகார் தந்தும் போலீஸார் துவக்கத்திலேயே நடவடிக்கை எடுக்கவில்லை. டாஸ்மாக்கில் மதுபானம் விலை அதிகமாக இருப்பதால் இதுபோன்று உடல் உழைப்பு பணிகளில் ஈடுபடும் பலரும் வாங்கி குடித்தனர் என்கின்றனர் இப்பகுதி மக்கள். இப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனையும் மும்முரமாக நடந்து வருகிறது. பலரும் சிகிச்சை பெற்று உடல்நிலையை உறுதி செய்கின்றனர்.
ஆனால், உண்மையில் குழந்தைகளும், பெண்களும் தங்கள் வீட்டில் உள்ளோரை உழைத்து வாழ வைத்தோரை இழந்து தவிப்பதை கண்கூடாக பார்க்கமுடிகிறது. அவர்களின் கண்ணீர் துடைக்கப்படவேண்டும் என்பதே அரசின் விருப்பம். இனி எங்கும் இதுபோல் கண்ணீர்துளிகள் வராமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வியே பலருக்கும் எழுகிறது.