கார்த்திக் சுப்புராஜின் `ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றிக்குப் பின் மகிழ்ச்சியில் இருக்கிறார் ராகவா லாரன்ஸ். அடுத்தும் வித்தியாசமான கதைகள் ப்ளஸ் இயக்குநர்களோடு கைகோர்த்திருக்கிறார்.

‘காஞ்சனா’ பாகங்களுக்குப் பின்னர் டைரக்ஷனுக்கு பிரேக் கொடுத்துவிட்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார் ராகவா லாரன்ஸ். சத்யஜோதி தயாரிப்பில் வெங்கட் மோகன் இயக்கத்தில் ‘ஹண்டர்’ என்ற படத்தில் கமிட் ஆனார். விஷாலை வைத்து ‘அயோக்யா’வை கொடுத்த இயக்குநர் இவர். இதனை அடுத்து சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’, கார்த்தியின் ‘சுல்தான்’ படங்களின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணனின் டைரக்ஷனில் ‘பென்ஸ்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் கதையை எழுதி, தயாரித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இதனையடுத்து ‘கருடன்’ துரை.செந்தில்குமார் இயக்கத்தில் வெற்றிமாறன் திரைக்கதையில் ‘அதிகாரம்’, ராகவா லாரன்ஸின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் ‘துர்கா’ என அசத்தலான படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார். இதில் எதன் படப்பிடிப்பு முதலில் தொடங்கும் என்றும், ராகவா லாரன்ஸின் நிறுவனம் அடுத்துத் தயாரிக்கும் படம் எது என்றும் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி…

சென்ற ஆண்டில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘ருத்ரன்’, ‘சந்திரமுகி 2’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய படங்கள் வெளியாகின. இந்தாண்டு எந்தெந்த படங்கள் ரிலீஸ் ஆகவிருக்கின்றன என விசாரிக்கையில் ‘ஹண்டர்’, ‘பென்ஸ்’ படங்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள். இரண்டு படங்களின் ஸ்கிரிப்ட்களும் பக்காவாக ரெடியாவிட்டதால் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்குகிறது. இதில் ‘ஹண்டர்’ படத்தின் படப்பிடிப்பே முதலில் தொடங்குகிறது.
வெற்றிமாறன் திரைக்கதை எழுத துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கும் ‘அதிகாரம்’ படம், ‘கருடன்’ படத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது.
அந்தப் படத்தில் நடிப்பது குறித்து லாரன்ஸ், “வெற்றிமாறன் சாரின் ‘அதிகாரம்’ படத்தின் திரைக்கதையைக் கேட்டுப் பிரமித்துப் போனேன். அவர் எழுதியுள்ள இந்த பிரமாண்ட கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். துரை செந்தில்குமார் இப்போது லெஜண்ட் சரவணாவை வைத்து இயக்கி வருகிறார். இதன் பிறகு நயன்தாரா படத்தை இயக்குவார் என்ற பேச்சு இருப்பதால், இப்போதைக்கு ‘அதிகாரம்’ யார் கையிலும் இல்லை.

‘ஹண்டர்’, ‘பென்ஸ்’ படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் டைரக்ஷனில் கவனம் செலுத்துகிறார் லாரன்ஸ். ‘காஞ்சனா’ சீரிஸின் அடுத்த கதையான ‘துர்கா’வின் அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதன் படப்பிடிப்பும் இந்தாண்டே இருக்கலாம் என்கிறார்கள். இதற்கிடையே சண்முகப்பாண்டியன் நடித்து வரும் ‘படைத்தலைவன்’ படத்தில் நட்புக்காகச் சிறிய வேடம் ஒன்றிலும் நடிக்கிறார்.
‘துர்கா’வைத் தொடர்ந்து தனது தம்பியான எல்வின் நடிப்பில் ‘புல்லட்’ படத்தையும் தயாரித்து வருகிறார். இதில் எல்வினின் நடிப்பைக் கண்டு வியந்து அவருக்கு கார் ஒன்றையும் பரிசளித்து மகிழ்ந்துள்ளார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்காகவும் ஒரு படம் பண்ணுகிறார். அதில் அவர் மாற்றுத்திறனாளியாக நடிப்பதுடன், அந்தப் படத்தில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டமும் வைத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.