புதுடெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடுவது, ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வது, தனியார் தொழில்துறை முதலீட்டு வளர்ச்சி, குடும்பங்களின் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துவது, வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரின் சக்தி ஆகியவற்றில் மத்திய அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அனைவரும் அமைதி காக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு இடையே நிர்மலா சீதாராமனை பட்ஜெட் உரை நிகழ்த்த சபாநாயகர் அழைத்தார். பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன் நிர்மலா சீதாராமன் கூறியது: “2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை சமர்ப்பிக்கிறேன். வளர்ச்சியை முடுக்கிவிடுவது, ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வது, தனியார் தொழில்துறை முதலீட்டு வளர்ச்சி, குடும்பங்களின் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துவது, வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரின் சக்தி ஆகியவற்றில் மத்திய அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை இந்த பட்ஜெட் கருத்தில் கொண்டுள்ளது.
நமது பொருளாதாரம் அனைத்து முக்கிய பொருளாதாரங்களிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டு காலத்தில் நாம் அடைந்துள்ள வளர்ச்சி, நாம் நிகழ்த்தியுள்ள சாதனை, நாம் உருவாக்கியுள்ள கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவை உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன. இந்தியாவின் திறன் மற்றும் ஆற்றலின் மீதான நம்பிக்கை கடந்த 10 ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்துள்ளது. அனைத்து பிராந்தியங்களின் சீரான வளர்ச்சியைத் தூண்டும் வகையிலான அனைவருக்குமான வளர்ச்சியை உறுதிப்படுத்தக்கூடியதாக அடுத்த 5 ஆண்டுகள் இருக்கும் என்று நாங்கள் பார்க்கிறோம்.
இந்த நூற்றாண்டின் முதல் காலாண்டின் நிறைவு பகுதியில் நாம் இருக்கிறோம். புவி அரசியல் சூழல்களைப் பார்க்கும்போது, ஓரளவுக்கு மந்தமான பொருளாதார நிலையே இருக்கிறது. அதேநேரத்தில், கடந்த 10 ஆண்டு கால அரசின் சாதனைகள் வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் நமது கனவு நனவாகும் என்ற ஊக்கத்தை அளிக்கின்றன. நமது பொருளாதாரம் மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக திகழ்கிறது. நமது பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டுகளில் சிறப்பாக இருந்தது. உலக அளவில் ஈர்ப்பை உருவாக்கி இருக்கிறது. நமது திறன்கள் மேம்பட்டிருக்கின்றன. நமது பிராந்தியத்தில் நாம் வளர்ந்திருக்கிறோம்.
பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான வழிகாட்டுதலின் கீழ் அனைத்து மண்டலங்களுக்கான வளர்ச்சியை நாம் உறுதி செய்திருக்கிறோம். தேசம் என்பது மண் அல்ல; தேசம் என்பது மக்களால் ஆனது என்று தெலுங்கு கவிஞர் குருஜாதா அபாராவ் கூறி இருக்கிறார். இதை கருத்தில் கொண்டு வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வறுமை ஒழிப்பு, நல்ல பள்ளிக் கல்வி, தரமான எளிதாக அணுகக்கூடிய சுகாதாரம், திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலை வாய்ப்புகள், பொருளாதார செயல்பாடுகள், நமது நாட்டை உலகின் உணவுக் களஞ்சியமாக மாற்றுவதற்கான வழிகள் ஆகியவற்றை அடைய 10 துறைகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
தலித்துகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோரை உள்ளடக்கிய வளர்ச்சி, நகர்ப்புறம் கிராமப்புறம் என உள்ளடக்கிய வளர்ச்சி, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் வளர்ச்சி, சிறு குறு நடுத்தர தொழில்கள் மேம்பாட்டுக்கான திட்டங்கள் ஆகியவற்றை இந்த பட்ஜெட் உள்ளடக்கி உள்ளது” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். |வாசிக்க > மத்திய பட்ஜெட் 2025 – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?