போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு; 144 தடை; உயர்நீதிமன்றத்தில் முறையீடு! -டென்ஷனில் திருப்பரங்குன்றம்!

திருப்பரங்குன்றத்தில் மலை உரிமை சம்பந்தமாக இந்து முன்னணி பிப்ரவரி 4-ஆம் தேதி அறிவித்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், இன்றும் நாளையும் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் போலீசார்

போராட்டத்துக்கு அனுமதி வழங்கக்கோரி இந்து அமைப்பினர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், ‘திருப்பரங்குன்றம் தைப்பூச விழாவுக்கு பக்தர்கள் செல்ல காவல்துறையினர் விதித்துள்ள கட்டுப்பாட்டுகளை நீக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் முருக பக்தர்கள் சார்பில் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் “திமுகவின் மரபணுவிலேயே இந்து மத விரோதம் உள்ளது. இந்துக்கள் எதைச் செய்தாலும் அதை தடுப்பது ஏளனம் செய்வதை  தொடர்ந்து செய்கிறார்கள். மதசார்பின்மை என்ற பெயரில் மூன்று மதத்தையும் சமமாக பார்க்காமல் இந்து மத உரிமைகளை மட்டும் பறித்து வருகிறார்கள். இப்போது மட்டுமல்ல,  திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறார்களோ அப்போதெல்லாம் இந்து அமைப்புகளை வளரவிடக்கூடாது என்று  எந்த போராட்டத்திற்கும் அனுமதி அளிப்பதில்லை.

திருப்பரங்குன்றத்தில் என்ன பிரச்னை என்பது அனைவருக்கும் தெரியும், அங்கு சில அடிப்படைவாதிகள் செய்த செயல் இந்துக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அதை எதிர்த்துதான் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையின் கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காவடி எடுக்க தீர்மானித்துள்ள பக்தர்களிடம் இன்றே காவடி எடுங்கள் என காவல்துறையினர் வற்புறுத்துகிறார்கள். மற்ற வழிபாடுகளில் தலையிட முடியாத காவல்துறையினர் இந்து மத வழிபாடுகளில் மட்டும் தலையிடுகிறார்கள்.

இராம. ஸ்ரீநிவாசன்

தமிழகத்தில் என்ன திமுக ஆட்சி நடைபெறுகிறதா அல்லது ஆங்கிலேயர் மற்றும் ஔரங்கசீப் ஆட்சி நடைபெறுகிறதா? என்று எண்ணும் அளவிற்கு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை உள்ளது.

பாஜகவை கடுமையாக எதிர்க்கின்ற மேற்கு வங்காளத்திலும், கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிற கேரளாவிலும் பாஜகவின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சியில் எப்போதும் அனுமதி கிடைப்பதே இல்லை. இதற்கு மட்டுமல்ல தமிழகத்தில் எந்த போராட்டத்திற்கும் அனுமதி கொடுப்பது இல்லை. அதை சுட்டிக்காட்டி பேசிய கூட்டணிக் கட்சித் தலைவர் பாலகிருஷ்ணனையே அப்பொறுப்பிலிருந்து திமுக அரசு மாற்றி விட்டது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம், நாளை நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். வருகின்ற தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு அரசும் கட்டுப்பட வேண்டும். நாளை வரும் தீர்ப்பை பொறுத்து எங்களுடைய செயல்பாடுகள் இருக்கும்” என்றார்.

மத நல்லிணக்க அமைப்பினர்

இன்னொரு பக்கம், பல்வேறு அமைப்பினர் இணைந்த மதநல்லிணக்க அமைப்புகளின் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், “திருப்பரங்குன்றம் மலையில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்திவரும் நிலையில், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதலை உண்டாக்கும் சங்பரிவார் அமைப்பினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

தமிழக அரசின் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தில் முறையாகப் பயின்றவர்களை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அர்ச்சகர்களாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்கள்” என்றார்.

திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசார்

கலெக்டர் சங்கீதா தரப்பில், “அரசு நிர்வாகம் சமூக நல்லிணக்கத்தோடு எந்தவித பாரபட்சமின்றியும் செயல்படுகிறது. பிரச்னையை உருவாக்க முயலும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 உத்தரவு பிறப்பித்துள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் செல்கின்ற அனைத்து வழியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.