பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டு புலி நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரப்பிய ஒருவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் கருவரகுண்டு பகுதியை சேர்ந்தவர் ஜெரின் ஆப்ரகாம் (36). இவர் தங்கள் பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்துக்கு அருகில் புலி ஒன்றை பார்த்ததாக வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ பிறகு செய்தி சேனல்களிலும் வெளியானதை தொடர்ந்து பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று புலியின் காலடித்தடம் உள்ளதா என ஆராய்ந்தனர். சிசிடிவி பதிகளையும் ஆய்வு செய்தனர். இதில் ஜெரின் பொய்யான தகவலை வெளியிட்டது தெரியவந்தது. மேலும் 3 ஆண்டுகளுக்கு முன் யூபியூபில் வெளியான ஒரு வீடியோவில் மாற்றம் செய்து ஜெரின் வெளியிட்டதும் உறுதியானது.
இதையடுத்து வனத்துறை அளித்த புகாரின் பேரில் ஜெரின் ஆப்ரகாமை போலீஸார் கைது செய்தனர். அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.