இம்பால்: மணிப்பூரில் போராட்டக்காரர்கள் நடத்திய முழுஅடைப்புப் போராட்டத்தால் குகி இன மக்கள் வாழும் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினரின் அடக்குமுறையை எதிர்த்து குகி இனக்குழுக்கள் அழைப்பு விடுத்திருந்த காலவரையற்ற முழுஅடைப்பு போராட்டத்தின் பகுதியாக இந்தப் போராட்டம் நடந்தது.
குகி இனமக்கள் அதிகம் வசிக்கும் சுரசந்த்பூர் மற்றும் தெங்கவுன்பால் மாவட்டங்களில் போராட்டக்கார்கள் சாலைகளில் டயர்களை எரித்தும் கற்களைப் போட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு அவை பாதுகாப்பு படையினரால் அப்புறப்படுத்தப்பட்டன. என்றாலும் இரு தரப்புக்கும் இடையில் புதிய மோதல் சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. குகி இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. சாலைகளில் சில வாகனங்கள் இயங்கின என்றாலும் மக்களை வெளியே வர வேண்டாம் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியிருந்தனர். சனிக்கிழமை வன்முறை வெடித்த காங்போக்பி மாவட்டத்தில் அமைதி நிலவினாலும் பதற்றம் நிலவியது.
முன்னதாக, மணிப்பூரில் கடந்த மே 2023 இனக்கலவரத்துக்கு பின்னர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு மாநிலத்தில் சனிக்கிழமை பேருந்து போக்குவரத்துத் தொடங்கியது. மணிப்பூரில் இருந்து தங்களுக்கு தனி நிர்வாகம் ஏற்படுத்தும் வரை பொது போக்குவரத்தை அனுமதிக்க முடியாது என குகி சமூகத்தினர் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் அவர்கள் பல இடங்களில் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். இந்த தடைகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன.
குகி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. காங்கோக்பியில் நடந்த மோதலில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார். பெண்கள், காவலர்கள் உள்ளிட்ட 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மணிப்பூரில் நில உரிமைகள், அரசியல் பிரதிநித்துவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மைதேயி – குகி சமூகத்தினர் இடையே கடந்த 2023, மே முதல், மோதல் மற்றும் வன்முறை நிலவி வரும் நிலையில் அங்கு முதல்வராக இருந்த பிரேன் சிங் பதவி விலகினார்.
அதனைத் தொடர்ந்து மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் மணிப்பூரில் மார்ச் 8ம் தேதி முதல் பொதுப்போக்குவரத்தை உறுதி செய்ய அமித் ஷா உத்தரவிட்டிருந்தார்.
அமித் ஷாவின் உத்தரவுக்கு குகி இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. சனிக்கிழமை இரவு வரை போராட்டக்காரர்கள். மோதலில் ஈடுபட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.