டெல்லியை சுருட்டிய நரைன், வருண்.. தோல்விகளில் இருந்து மீண்ட கொல்கத்தா!

ஐபிஎல்லின் 18வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இத்தொடரின் 48வது லீக் ஆட்டம் இன்று (ஏப்ரல் 29) டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. 

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் களம் இறங்கினர். இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் அதை தொடர முடியவில்லை. 48 ரன்கள் எடுத்த போது குர்பாஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து நரைன் 27, ரஹானே 26, வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து ரகுவன்சி மற்றும் ரிங்கு சிங் சிறிது நேரம் களம் நிலைத்து ரன்களை சேர்த்தாலும் சீரான இடைவெளியில் டெல்லி அணி விக்கெட்களை வீழ்த்த தவறவில்லை. இதனால் ரிங்கு சிங் 36, ரகுவன்சி 44 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களையும் விப்ராஜ் நிகாம் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 

இதனைத் தொடர்ந்து டெல்லி கேபிடல்ஸ் அணி 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் டெல்லி அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. அபிஷேக் போரல் 4, கருண் நாயர் 15, கே. எல். ராகுல் 7 ரன்களில் வெளியேறினர். இதையடுத்து டு பிளசிஸுடன் அக்சர் படேல் கைகோர்த்தார். இந்த கூட்டணி டெல்லி அணிக்கு ரன்களை சேர்க்க தொடங்கியது. 

டு பிளசிஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த அக்சர் படேல் 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில், சுனில் நரைன் வீசிய 14வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ஸ்டப்ஸும் ஆட்டமிழந்தார். இதையடுத்து டு பிளசிஸும் ஆட்டமிழந்தார். அவர் கடைசி வரை களத்தில் இருந்து டெல்லி அணிக்கு வெற்றி பெற்று தருவார் என நினைத்த நிலையில், 62 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து அசுதோஷ் சர்மா ஆட்டமிழக்க, போட்டி முழுமையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பக்கம் மாறியது. இறுதியில் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக நரைன் 3 விக்கெட்களையும் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். மேலும், இதன் மூலம் தற்போது கொல்கத்தா அணி தோல்விகளில் இருந்து மீண்டுள்ளது. 

மேலும் படிங்க: CSK vs PBKS: இனி சிஎஸ்கே-வில் இந்த வீரருக்கு இடமில்லை.. நுழையும் இளம் வீரர்!

மேலும் படிங்க: ‘ரொம்ப லக்கி’ சூர்யவன்ஷி குறித்த கில் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு – பின்னணி என்ன?

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.