கரூர்: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை அடுத்த ஜோதிவடத்தை சேர்ந்தவர் பிரபு (40). இவர் கற்றாழை மூலப்பொருட்களை கொண்டு பொருட்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். மனைவி மதுமிதா, மகள் தியா (10), மகன் ரிதன் (3).
பிரபு அவர் மனைவி, குழந்தைகள், அவரது மாமனார் முத்துகிருஷ்ணன் (61) ஆகியோருடன் கொல்கத்தாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். கொல்கத்தா படாபஜார் ரபிந்தரசரணி பகுதியில் உள்ள 5 மாடிகள் கொண்ட தனியார் ஹோட்டல் ரிதுராஜில் குடும்பத்துடன் பிரபு தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு இரவு உணவு வாங்குவதற்காக பிரபுவும் அவர் மனைவி மதுமிதாவும் வெளியே சென்றுள்ளனர். அப்போது முத்துகிருஷ்ணன் பிரபுவுக்கு போன் செய்து ஹோட்டலில் தீப்பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். உடனே குழந்தைகளை அழைத்து கொண்டு ஹோட்டலின் மேல்பகுதிக்கு செல்ல பிரபு அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால், அதற்குள் புகைமூட்டம் காரணமாக அறையை விட்டுவெளியேற முடியாமல் முத்துகிருஷ்ணன், அவரது பேரக்குழந்தைகள் தியா, ரிதன் ஆகிய 3 பேரும் மூச்சுத்திணறி, உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.