பஹல்காம் தாக்குதல் விவகாரம்: பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை

வாஷிங்டன்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனும் தொலைபேசியில் பேசியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று (ஏப்ரல் 30) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோருடன் பேசினார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்ததுடன், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுக்கு தனது ஆதரவையும் தெரிவித்தது. மேலும், தெற்காசியாவில் பதட்டங்களைத் தணிக்கவும் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்கவும் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுமாறு அமெரிக்கா இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்புடனான தொலைபேசி உரையாடலின்போது மார்கோ ரூபியோ, இந்த நியாயமற்ற தாக்குதலை விசாரிப்பதில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், பதட்டங்களைத் தணிக்க பாகிஸ்தான் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார்.

வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், ஷெபாஸ் ஷெரீப் உடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, பயங்கரவாதிகளை அவர்களின் கொடூரமான வன்முறைச் செயல்களுக்குப் பொறுப்பேற்க வைப்பதில் தங்கள் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உடனான தொலைபேசி உரையாடல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (மே 1) தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் விவாதித்தேன். அதன் குற்றவாளிகள், ஆதரவாளர்கள் மற்றும் திட்டமிடுபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், “தெற்காசிய பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். மேலும் பல மட்டங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். பொறுப்பான தீர்வுக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட நாங்கள் ஊக்குவிக்கிறோம். உலகம் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது,” என்று கூறினார்.

பாகிஸ்தான் “அமெரிக்காவுக்காக இந்த மோசமான வேலையைச் செய்து வருகிறது” என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த டாமி புரூஸ், “இங்கு விவாதிக்க நான் உண்மையில் தயாராக உள்ள ஒரே விஷயம், வெளியுறவு அமைச்சர் இரு நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்களுடனும் பேசுவது குறித்துத்தான் என கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.