சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வரவேற்பு அளித்ததுடன், அனைத்து சமூகங்களின் பிரதிநிதித்துவத்தையும் சாதிவாரி கணக்கெடுப்பு உறுதி செய்யும் என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்க வேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியது அவசியம். அந்தவகையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மத்திய அரசின் முடிவை மனதார வரவேற்கிறேன்.
விசிக தலைவர் திருமாவளவன்: இந்தியாவில் அடுத்து மேற்கொள்ளப்பட இருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இது விசிக உள்ளிட்ட சமூகநீதிக் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். அதேநேரம் சமூக நீதியில் உண்மையிலே பாஜக அரசுக்கு அக்கறையிருந்தால் உடனடியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலே அதற்கான சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றமாக இருக்கும். அதேநேரம் சமத்துவத்துக்கான உண்மையான அர்ப்பணிப்பில் இதற்காக போராடிய தலைமுறையினரை கவுரவிக்க வேண்டியதும் அவசியம். மக்கள் நீதி மய்யம் நீண்ட காலமாக சாதி அநீதிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில் மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை வரவேற்கிறோம்.
தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.சேக் தாவூத்: மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு உத்தரவை மனதார வரவேற்கிறோம். இது இந்தியாவில் அனைத்து சமூகங்களுக்கும் நீதியையும், பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்யும். அதன்படி 1931-ல் நடந்த கடைசி சாதி கணக்கெடுப்புக்குப் பின் உள்ள இடைவெளியை சரிசெய்யும் வாய்ப்பாக இதை நான் பார்க்கிறேன். இதை முஸ்லிம்கள் எச்சரிக்கையுடனும், தெளிவுடனும் அணுக வேண்டும். இந்த கணக்கெடுப்பு நம் சமூகத்தின் உண்மையான வலிமையை பதிவு செய்யும் வாய்ப்பாகும். அந்தவகையில் கணக்கெடுப்பு நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடப்பதை நாம் உறுதிசெய்வோம்.