கடந்த 4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 42,718 பேருக்கு வெளிப்படைத் தன்மையுடன் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) சார்பில் தேசிய அளவிலான மருத்துவ கல்வி மாநாடு சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாநாட்டை தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவ மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவில், சுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில் குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்பு ராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநர் தேரணி ராஜன், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலாளர் கோபால கிருஷ்ணன், சென்னை மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் கவிதா மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: இந்த மாநாட்டில் 2,000-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர்களை ஒரே இடத்தில் வைத்து, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துவது என்பது யாரும் நினைத்து பார்க்க முடியாக விஷயமாகும். இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளே பாராட்டும் வகையிலான மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது.

8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களும், 279 வட்டார மருத்துவமனைகளும், 37 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளும், 36 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 22 இந்திய மருத்துவத் துறை சார்ந்த மருத்துவமனைகள், 3 பல் மருத்துவ கல்லூரிகள், 2 பன்னோக்கு மருத்துவமனைகள் என்று 11,876 மருத்துவ கட்டமைப்புகள் தமிழகத்தில் இருக்கிறது.

மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48, இதயம் காப்போம், சிறுநீரகம் பாதுகாப்போம் திட்டம், பாதம் காப்போம் திட்டம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களைத் தேடி ஆய்வகம் திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம், செயற்கை கருத்தரித்தல் மையங்கள் என்று பல சிறப்புக்குரிய திட்டங்கள் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த அரசு பொறுப் பேற்ற பிறகு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக இதுவரை 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது.

கடந்த மாதம் 48 பல் மருத்துவர்களுக்கான தேர்வில் 11,720 பேர் பங்கேற்றனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அவர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு, இடஒதுக்கீடு அடிப்படையில் 48 பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த 4 ஆண்டுகளில் 42,718 பேருக்கு வெளிப்படைத் தன்மையுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.