சென்னை: கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் இன்று (மே.4) தொடங்கிய நிலையில், சென்னையில் இன்று மதியத்துக்கு மேல் திடீரென பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
இந்நிலையில், கோவை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் (மே.4, 5 தேதிகளில்) கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தின் ஒருசில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கோவை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39 – 40 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 -29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திங்கள் (மே.5) மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (மே.6) தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை நிலவரம்: வெப்பநிலையைப் பொறுத்தளவில், மே 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாறுதல்கள் இருக்காது. என்றாலும் ஒருசில இடங்களில் வெப்பம் படிப்படியாக குறையும்.
மே 4 மற்றும் 5-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும். 6-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்.