லாகூர்,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.
போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. அதேவேளை, சில நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்து வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி சயது அசீம் முனீரை ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி சயது அப்பாஸ் ஆர்சி நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியாவுடனான மோதல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி சயது அப்பாஸ் ஆர்சி இன்று இந்தியா வர உள்ளார். அவர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.