ஜே.பி.நட்டா பயணித்த குண்டு துளைக்காத வாகனம் பழுதடைந்தது ஏன்? – டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

சென்னை: தமிழகம் வந்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவின் குண்டு துளைக்காத வாகனம் திடீரென பழுதடைந்தது ஏன் என டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா மத்திய பாதுகாப்பு படையினருடன் கூடிய இசட் பிளஸ் (z+) பாதுகாப்பு பிரிவு உடையவர். அவர் 2-ம் தேதி சென்னைக்கு வருகிறார் என்ற தகவல் அறிந்ததும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டன.

அதன்படி அவருக்காக குண்டு துளைக்காத வாகனமும் மற்றும் அவருடன் மத்திய பாதுகாப்பு படையினர் பயணிப்பதற்காக இரண்டு வாகனங்களும் தமிழக பாதுகாப்பு படையினர் பயணிக்க 3 வாகனங்களும், ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் மாற்று வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டன.

இத்தகைய குண்டு துளைக்காத வாகனங்கள், மத்திய அரசிசால் பரிந்துரைக்கப்பட்ட பணிமனைகளில் தயாரிக்கப்பட்டு பாதுகாப்புப் பிரிவின் பயன்பாட்டில் நல்ல முறையில் இயங்கி வருகின்றன. இத்தகைய வாகனங்கள் தொழில்நுட்ப காரணங்களால் அதிவேகமாக செல்லக்கூடாது என நிபந்தனைகள் உள்ளன.

கடந்த 3-ம் தேதி எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 6-வது சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு மதியம் அங்கிருந்து புறப்பட்டு வேலூர் பொற்கோயிலுக்குச் சென்று பின்னர் இரவு 8.40 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி பயணிப்பதற்காக மாலை 5.30 மணியளவில் வேலூரிலிருந்து புறப்பட்டு மத்திய அமைச்சர் சென்னை திரும்பினார்.

இரவு 7.30 மணியளவில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் திருமுடிவாக்கம் அருகில் வந்து கொண்டிருந்தனர். குண்டுதுளைக்க முடியாத வாகனங்கள் தொழில்நுட்ப காரணங்களுக்காக மற்ற வாகனங்களைப்போல வேகமாக இயக்கப்படுவதில்லை.

ஆனால், ஒன்றிய அமைச்சரின் நேர்முக உதவியாளர் வற்புறுத்தியதின் பேரில் வாகனங்கள் மணிக்கு 120 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் இயக்கப்பட்டுள்ளன. அதனால் பின்பக்க சக்கரத்தில் உருவான உராய்வு சத்தம் கேட்டுள்ளது. இதையறிந்து அமைச்சரின் பாதுகாப்பு கருதி வாகனத்தின் வேகத்தை குறைத்த ஓட்டுநர் பின்னர் சாலை ஓரத்தில் நிறுத்தினார்.

பின்னர் உடனடியாக மாற்று வாகனத்தில் மத்திய அமைச்சரை ஏற்றி, உரிய பாதுகாப்புடன் சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இதில் அமைச்சர் பயணம் செய்த வாகனத்துக்கு எவ்வித சேதமோ அதன் உள்ளிருந்தவர்களுக்கு எவ்வித பாதுகாப்பு குறைபாடோ ஏற்படவில்லை.

மத்திய அமைச்சர் பயணம் சென்ற குண்டு துளைக்காத வாகனம் உடனடியாக நிறுத்தப்பட்டபோது அவரது உடைமைகளுடன் பின்னால் வந்த 8-வது நிலையிலிருந்த வாகனத்தின் மீது பத்தாவது நிலையிருந்த பாதுகாப்பு வீரர்களின் வாகனம் பின்புறத்தில் உரசி நின்றது. இதனால் 8-வது வாகனத்தின் இடது பின்புறம் மற்றும் 10-வது வாகனத்தின் வலது முன் பகுதி குறைந்த அளவில் சேதமானது.

தமிழக காவல்துறையில் பாதுகாப்பு பிரிவில் உள்ள குண்டுதுளைக்காத வாகனங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதால் அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு முக்கிய விருந்தினர்கள் வரும்பொழுது அவர்களின் வேண்டுகோளின்படி, இவ்வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.