தீவிரவாதிகள் குழுவினர் ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்தது.

இத்தகைய சூழலில்தான், பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற 15 நாள்களில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களின் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இத்தகைய தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் இந்திய அரசை வரவேற்று ஆதரித்து வருகின்றனர்.
No nation should have to accept terrorist attacks being launched against it from land controlled by another country.
India is justified in striking terrorist infrastructure. There can be no impunity for terrorists.
— Rishi Sunak (@RishiSunak) May 7, 2025
இந்த நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரும் இந்திய வம்சாவளியுமான ரிஷி சுனக், “வேறொரு நாட்டின் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்திலிருந்து தங்கள் நாட்டின் மீது நடத்தப்படும் தீவிரவாத தாக்குதலை எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளாது. தீவிரவாத உட்கட்டமைப்பை இந்தியா தாக்கியது நியமானது. தண்டனையிலிருந்து பயங்கரவாதிகளுக்கு விலக்கு அளிக்க முடியாது.” என்று இந்தியாவின் நடவடிக்கையை எக்ஸ் தளத்தில் ஆதரித்திருக்கிறார்.