பெண்களின் தேசம் இந்தியா, பெண்களை சக்தியாக கொண்டாடும் நாடு இந்தியா என்பதை நிரூபிக்கும் வகையில், மகா சக்திகளாக தலைமையேற்று விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் பாகிஸ்தானில் நடத்திய ஆக்ரோஷ தாக்குதல் உலகையே வியக்க வைத்துள்ளது.
காஷ்மீரின் பகல்ஹாம் தீவிரவாத லுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத மையங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலை தலைமையேற்று நடத்தியவர்கள் 2 பெண்கள் என்பதை அறிந்து உலகம் ஆச்சரியப்பட்டது.
அந்த தாக்குதலை முன்னின்று நடத்தியது விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி இருவர்தான். புதன்கிழமை அதிகாலை 1.05 மணிக்கு தாக்குதலை தொடங்கி 25 நிமிடங்களில் 1.30 மணிக்குள் முடித்து விட்டனர்.
பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தில் இருவரையும் முன்னிலைப்படுத்தியே மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி பேசினார். ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அவர் ஒதுங்கி கொள்ள விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோபியா குரேஷி ஆகியோர்தான் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி விளக்கம் அளித்தனர்.
அப்போது அவர்கள் கம்பீரமாகவும், துணிவுடனும் அளித்த பேட்டி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. அப்போது கர்னல் சோபியா குரேஷி கூறுகையில், “நம்பகமான உளவுத் தகவல்கள் மற்றும் எல்லை தாண்டிய தீவிரவாதத்தில் அவர்களுக்குள்ள தொடர்பின் அடிப்படையில் தாக்குதலுக்கான இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பாகிஸ்தானில் எந்த ராணுவ நிலையும் குறிவைக்கப்படவில்லை” என்று தெள்ள தெளிவாக கூறினார்.
விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், இந்தியா தனது பதிலடியில் மிகுந்த நிதானத்தை கடைபிடித்துள்ளது. எனினும், நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் பாகிஸ்தான் ஏதேனும் விஷமம் செய்தால், அதற்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப் படைகள் முழு அளவில் தயாராக உள்ளன” என்று திட்டவட்டமாக கூறினார். பயங்கரவாதிகளை துவம்சம் செய்ய பாகிஸ்தானில் நள்ளிரவில் பாரிவேட்டை நடத்திய பிறகும் அவர்களிடம் ஒரு அமைதி நிலவியது.
வியோமிகா சிங்: விங் கமாண்டர் வியோமிகா விங் இந்திய விமானப் படையில் ஒரு திறமைவாய்ந்த ஹெலிகாப்டர் விமானி ஆவார். பொறியியல் பட்டதாரியான இவர் முதல் தலைமுறை ராணுவ அதிகாரி ஆவார். பள்ளிப் பருவத்திலேயே விமானியாக வேண்டும் என்பது இவரது கனவாக இருந்தது.
தேசிய மாணவர் படையில் (என்சிசி) சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்திய விமானப் படையில் கடந்த 2019 டிசம்பர் 18-ம் தேதி விமானியாக சேர்ந்தார். இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் உயரமான மற்றும் மிகவும் சவாலான நிலப்பரப்புகளில் சேட்டக், சீட்டா போன்ற ஹெலிகாப்டர்களை இயக்கியுள்ளார். பல்வேறு மீட்புப் பணிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.
சோபியா குரேஷி: இந்திய ராணுவத்தின் சிக்னல்ஸ் படைப்பிரிவு அதிகாரியான கர்னல் சோபியா குரேஷி, வலுவான ராணுவப் பின்னணியை கொண்டவர். ஐ.நா. அமைதிப் பணிக்கான இந்தியப் படைக்கு தலைமையேற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமைக்கு உரியவர். மேலும் புனேவில் நடந்த பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவப் பிரிவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி ஆவார். குஜராத் மாநிலம் வதோதராவில் பிறந்த சோபியா குரேஷி ராணுவ குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தாத்தா இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.
பயோகெமிஸ்ட்ரி முதுகலை பட்டதாரியான இவர் கடந்த 1999-ல் அதிகாரிகள் பயிற்சி அகாடமி மூலம் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வுகள் பெற்றார். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத அல்லது அடிப்படை உரிமைகளை கூட அளிக்காத நாடுகள் மத்தியில், நெருக்கடியான கால கட்டத்தில் மிக மிக முக்கியமான பொறுப்பை இந்தியா பெண்களிடம் வழங்கியது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.