புதுடெல்லி: தேசிய கல்வி கொள்கையை ஏற்கும்படி மாநிலங்களை கட்டாய படுத்த முடியாது என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.
தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு, மேற்குவங்கம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தேசிய கல்வி கொள்கையை மாநிலங்கள் தேவையின்றி அரசியல் பிரச்சினையாக்குகின்றன.
அனைவருக்கும் சீரான கல்வியை வழங்க வேண்டும் என்றுதான் தேசிய கல்வி கொள்கை கூறுகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு அனைத்து இந்திய மொழிகளும் இலவசமாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இது அவர்களின் அடிப்படை உரிமை. இத்திட்டத்தை ஏற்க மறுப்பதன் மூலம், மாநில அரசு பள்ளிக் குழுந்தைகளுக்கு இலவச பள்ளிக் கல்வி என்ற அடிப்படை உரிமையை மறுக்கிறது.
பள்ளி கல்வியின் தரத்தை மேம்படுத்துவதுதான் தேசிய கல்வி கொள்கை . தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள், அரசியல்சான ரீதியாக தேசியக் கல்வி கொள்கையை அமல்படுத்த கடமைபட்டுள்ளன. ஆகையால் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.
இந்த விசாரணையின் போது மனுதாரரிடம், ‘‘நீங்கள் யார், தேசியக் கல்வி கொள்கை பற்றி நீங்கள் கவலைப்படுவது ஏன்? என கேட்டனர். இதற்கு மனுதாரர் நான் சென்னையை சேர்ந்தவன். டெல்லியில் வசிக்கிறேன்’’ எனறார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் கூறியதாவது:
நீங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், நீங்கள் டெல்லியில் வசிப்பதால், உங்கள் குழந்தைகள் இந்தியை தொடர்ந்து கற்கலாம். அதனால், நீங்கள் இந்த மனுவை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் சாசனத்தின் 32-வது பிரிவு அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பதற்கான அனுமதியை அளிக்கிறது.
அதனால் தேசிய கல்வி கொள்கையை ஏற்கம்படி எந்த மாநிலத்தையம் உச்ச நீதிமன்றம் கட்டாயபடுத்த முடியாது. மாநிலத்தின் செயல்பாடு மக்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக இருந்தால் மட்டுமே அதில் நீதிமன்றம் தலையிடலாம். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.