How To Apply For Birth Certificate Online: பிறப்புச் சான்றிதழில் ஒரு நபரின் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த சான்றிதழ் அந்த தகவலை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான ஆவணம் என்பது குறிப்பிடத்தக்கது. பிறப்புச் சான்றிதழ் என்ற முக்கியமான ஆவணம் ஒரு நபரின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான சான்றாகும்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969இன் கீழ் பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate) இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின்படி, ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் 21 நாட்களுக்குள் உள்ளூர் மாநகராட்சி அல்லது நகராட்சியில் பதிவு செய்யப்பட வேண்டும். இந்நிலையில் உங்கள் வீட்டில் புதிதாக பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வேண்டுமானால் எளிமையான ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து பெறலாம். எப்படி பெறுவது என்பதை இதில் காணலாம்.
பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க, முதலில் நீங்கள் அந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். அதன்படி சென்னையில் பிறப்புச் சான்றிதழைப் பெற, https://chennaicorporation.gov.in/gcc/online-services/birth-death/ என்ற இணைப்பைப் பார்க்க வேண்டும்.
இந்த பக்கத்திற்கு சென்று விண்ணப்பித்த பிறகு, நீங்கள் 7 முதல் 8 நாட்கள் காத்திருக்க வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் சான்றிதழை ஆன்லைனில் பெறுவீர்கள்.
அதே சமயம் கிராம பஞ்சாயத்துகளில் பதிவு செய்த பிறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்ய வேண்டுமானால் தமிழ்நாடு அரசின் https://gccapp.chennaicorporation.gov.in/birth_death_tn/PubBirthCertRepo… என்ற இணைய பக்கத்தை வெளியிட்டு உள்ளது. இந்த பக்கத்தின் உள்ளே சென்றதும் பர்த் சர்டிபிகேட் என்ற பக்கம் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
குழந்தை பிறந்த மருத்துவமனையில் RCH ID (Reproductive and Child Health ID) என்ற பதிவெண்ணை அந்த பக்கத்தில் பதிவிட வேண்டும். இதை தொடர்ந்து அதே பக்கத்தில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நம்பரை கொடுக்க வேண்டும். இது தவிர பாலினம், வயது, ஊர், பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட வேண்டும். இதை பதிவு செய்ததும் கீழே உள்ள பிறப்பு சான்றிதழ் காட்டப்படும். இதை நீங்கள் டவுண்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
பிறப்புச் சான்றிதழை பெற தேவையான ஆவணங்கள் என்னென்ன?
பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க மருத்துவமனையில் இருந்து பெற்ற பிறப்பு கடிதம், பெற்றோரின் திருமண சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் விவரம் போன்ற தகவல்கள் தேவைப்படும். நீங்கள் ஆன்லைனில் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பிறகு விண்ணப்பித்தால் இந்தச் சான்றிதழை ஆஃப்லைனில் மூலமாகவே மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறப்புச் சான்றிதழின் நகலைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் மாநில அரசால் பரிந்துரைக்கப்படலாம். எனவே, பிறப்புச் சான்றிதழின் நகலைப் பெறுவதற்கு முன், உங்கள் உள்ளூர் மாநகராட்சி அல்லது நகராட்சியின் இணையதளம் அல்லது அலுவலகத்தில் இருந்து தகவல்களைப் பெறுவது முக்கியம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.