புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதி உதவியும் பயங்கரவாதம் வளர துணை போகும் என்பதால், அந்நாட்டுக்கு உதவி செய்வதை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவத்தால் குறிவைக்கப்பட்ட ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளில் ஒன்றான குஜராத்தின் பூஜ் விமானப்படை தளத்துக்குச் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. இது வெறும் டிரெய்லர்தான். முழு படம் பின்னர் வெளிப்படும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தம் பாகிஸ்தானுக்கு ஒரு சோதனைக் காலம் போன்றது. பாகிஸ்தான் மீண்டும் மோசமான நடத்தைக்குத் திரும்பினால், இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும்.
நமது விமானப்படை பாகிஸ்தானின் ஒவ்வொரு மூலையையும் அடையும் திறன் கொண்டது என்பது சிறிய விஷயமல்ல. இது ஆபரேஷன் சிந்தூரின் போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை அதன் வீரம், தைரியம் மற்றும் மகிமையால் புதிய உயரங்களைத் தொட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூரில், நமது ஆயுதப்படைகள் எதிரிகளை ஆதிக்கம் செலுத்தியது மட்டுமல்லாமல், அவர்களை அழிப்பதிலும் வெற்றி பெற்றன.
சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் இரண்டாவது தவணையாக 1.023 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதியுதவியும் பயங்கரவாத நிதியுதவிக்குக் குறைவானது அல்ல.
அழிக்கப்பட்ட பயங்கரவாத உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப பாகிஸ்தான் முயற்சிக்கத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கிய 1 பில்லியன் டாலர் உதவியை IMF மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியா விரும்புகிறது. IMF-க்கு நாம் வழங்கும் நிதி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்பை உருவாக்கப் பயன்படுத்தப்படுவதை இந்தியா விரும்பவில்லை” என தெரிவித்தார்.