‘சிவப்பு, மஞ்சள், பச்சை’, ‘ஜெய் பீம்’ படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானவர் மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ். மலையாளம், தமிழ் இரண்டிலும் தனக்கான தேர்ந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்திருந்த ‘பொன்மேன்’ திரைப்படம் மொழிகள் தாண்டி கவனம் ஈர்த்திருந்தது. தமிழ், மலையாளம் என கவனம் ஈர்த்துவரும் லிஜோமோல், தனது சொந்த வாழ்க்கைக் குறித்து நேர்காணலில் பெரிதாகப் பகிர்ந்துகொண்டதில்லை. தற்போது தனது அம்மா இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறித்தும் அதனால் தனது சிறு வயதில் பாதிப்படைந்தது குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அம்மாவை விட்டு விலக ஆரம்பித்துவிட்டேன்
இதுகுறித்துப் பேசியிருக்கும் லிஜோமோல் ஜோஸ், “நான் சிறுவயதில் நிறைய மன அழுத்தங்களை எதிர்கொண்டிருக்கிறேன். எனக்கு ஒன்றரை வயது இருக்கும்போதே என்னோட அப்பா இறந்துவிட்டார். கொஞ்ச நாள் நானும் என் அம்மாவும் தனியாக இருந்தோம். திடீரென என் அம்மா மறுமணம் செய்துகொண்டார். அப்போது எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. திடீரென புதிதாக வந்த ஒருவரை தந்தையாக ஏற்றுக்கொள்ள எனக்கு மனம் வரவில்லை.
அதிலிருந்து என் அம்மாவை விட்டு விலக ஆரம்பித்துவிட்டேன். இரவெல்லாம் தூக்கம் வராது, எப்போதும் என்னுடைய அத்தை வீட்டில்தான் தூங்குவேன். சிறுவயதில் என் அம்மா அருகில் நான் அவ்வளவாகத் தூங்கியதில்லை. அம்மா மறுமணம் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாமலும், புரிந்துகொள்ள முடியமாலும் அந்த வயதில் எனக்குள் நிறைய மன அழுத்தங்கள் ஏற்பட்டது.

புரிந்துகொள்ள இவ்வளவு காலமாகிவிட்டது!
என் கல்லூரிப் படிப்பை முடித்தப் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவைப் புரிந்துகொண்டேன். அதன் பிறகுதான் அம்மாவின் கணவரையும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொள்ள மனம் கனிந்தது. அவர் வந்த பிறகு எங்கள் குடும்பம் நல்லபடியாக மாறியதை புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.
என் அம்மாவும், அவரது கணவரும் எனக்காக குழந்தைப் பெற்றுக் கொள்ளாமல் இப்போதுவரை வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் அன்பு எனக்குப் புரிய ரொம்ப நாளாகிவிட்டது. இப்போது எல்லோரும் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வருகிறோம். இந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்ள இவ்வளவு காலமாகிவிட்டது” என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…