ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி மீண்டும் பொதுநல மனு தாக்கல் செய்ததற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் 8,000-க்கும் மேற்பட்டோர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் நாடு கடத்தப்படுவதை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், தீபங்கர் தத்தா, என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 8-ம் தேதி விசாரித்தது. அப்போது மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், கோலின் கான்சால்வ்ஸ் ஆகியோரின் வாதங்களுக்கு பிறகு ரோஹிங்கியாக்கள் நாடு கடத்தப்படுவதற்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
அப்போது நீதிபதிகள், “ரோஹிங்கியாக்கள் இந்திய குடிமக்கள் அல்ல. நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை” என்று கூறினர்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், “ஐ.நா. அகதிகள் மாநாட்டில் இந்தியா கையெழுத்திடவில்லை. மேலும் ரோஹிங்கியாக்களுக்கு ஐ.நா. ஆணையர் வழங்கிய அகதி அந்தஸ்தின் செல்லுபடித்தன்மையை இந்தியா ஏற்கவில்லை” என்றார்.
இந்நிலையில் ரோஹிங்கியா அகதிகள் நாடு கடத்தப்படுவதை நிறுத்தக் கோரி மீண்டும் பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீண்டும் அதே அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஒரே பிரச்சினையில் புதிதாக எந்தவொரு காரணமும் இன்றி மீண்டும் மனு தாக்கல் செய்ததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். “கடந்த 8-ம் தேதி மியான்மருக்கு நாடு கடத்தப்பட்ட ரோஹிங்கியா அகதிகள் அங்கு தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக டெல்லியில் உள்ள தங்கள் உறவினர்களின் தெரிவித்துள்ளனர்” என்றார்.
இதன் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “நாடு தற்போது இருக்கும் சூழ்நிலையில் இத்தகைய மனுக்களை நீங்கள் தாக்கல் செய்ய முடியாது” என்றனர். வழக்கு விசாரணையை ஜூலை 31-ம் தேதி தள்ளி வைத்தனர்.