2025 ஐபிஎல் தொடரின் 60வது லீக் ஆட்டம் இன்று டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதை வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதுவரை 2 டவுனில் களம் இறங்கி வந்த கே. எல். ராகுல், இப்போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கினார். அவருடன் பாஃப் டூ பிளெசிஸ் களம் இறங்கினார். ஆனால் டூ பிளெசிஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அபிஷேக் போரல் 30, அக்சர் படேல் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி வந்தார்.
டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடி வந்த கே.எல். ராகுல் சதம் விளாசினார். ஸ்டப்ஸ் 21 ரன்களுடனும், ராகுல் 112 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் அணி சார்பில் அர்ஷத் கான், பிரஷித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய நிலையில், இருவரும் ஆட்டமிழக்காமல் இந்த 200 ரன்கள் இலக்கை அடித்து முடித்தனர். சாய் சுதர்சன் சதம் விளாசினார். சுப்மன் கில் 93 ரன்களை குவித்தார். இதன் மூலம் குஜராத் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.
இதனால் டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. டெல்லி அணி கடைசி விளையாடிய 7 போட்டியில் 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இதில் ஒரு போட்டி மழையாலும், ஒரு போட்டி பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாகவும் ரத்து செய்யப்பட்டது. முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணி அடுத்த பாதியில் கடுமையாக சொதப்பி உள்ளது. இந்த அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. அதில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு அந்த அணியால் செல்ல முடியும். ஆனால் அப்போட்டிகள் மும்பை மற்றும் பஞ்சாப் என இரு வலுவான அணிகளுடன் உள்ளன. எனவே அவர்கள் உடனான போட்டி மிகவும் சவாலானதாக இருக்கும் என்பதால், டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் படிங்க: 10 கிலோ உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆன சர்பராஸ் கான்.. என்ன செய்தார்?
மேலும் படிங்க: “அவர் நினைத்திருந்தால்”.. விராட் கோலி குறித்து முன்னாள் வீரர் சேவாக்!