சென்னை: பாஜகவுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றிக் கழகம் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகப் பேட்டியில் அவர், “பாஜகவுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றிக் கழகம் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. தவெக தலைவர் விஜய் இதுவரை எதுவும் சொல்லவில்லை. எனவே மற்றவர்களின் கருத்து குறித்து பதில் கூற முடியாது. எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என எண்ணுபவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எல்லோரும் ஒன்று சேர வேண்டிய சூழல் வந்திருக்கிறது என்பது எனது கருத்து.
பாஜக பலம் பொருந்திய கட்சியாக இருக்கிறது. இண்டியா கூட்டணி வலுவிழந்த கூட்டணியாக தான் இருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சசி தரூர் பிரதமர் மோடியை உண்மையாகவே ஆதரிக்க ஆரம்பித்து விட்டார். உண்மையை யாரும் மறைக்க முடியாது. இதனால் எதிர்கட்சியினரே மோடியை பாராட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாட்டில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதைத்தான் தமிழக குழந்தைகள் படிக்க வேண்டும் என திமுக நினைக்கிறது. இவர்கள் வேண்டுமென்றே புதிய கல்விக் கொள்கையை மதயானை என்று சொல்கிறார்கள். எல்லா மாநிலங்களும் புதியக் கல்விக் கொள்கையின் நல்லவற்றை எடுத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டது.
தமிழை வளர்க்கிறோம் என்று சொல்கிறார்கள், ஆனால் 8 பேர் தான் தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். மதுரையில் ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் தமிழில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். பொய்யாமொழி பொய் பொய்யாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏழைகள் வீட்டு குழந்தைகள் தங்கள் வீட்டு குழந்தைகளைப் போல படித்து விடக்கூடாது என நினைக்கிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.