ஓசூர்: தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து 904 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை வேகமாக நிரம்புவதால் ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான தமிழக மற்றும் கர்நாடக தென்பெண்ணை ஆற்று பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
நீர்பிடிப்புப் பகுதிகளி்ல் நேற்று முன்தினம் மழை பெய்ததால், அணைக்கு நீர் வரத்து மேலும் உயர்ந்த நிலையில், நேற்று இரவு ஓசூர் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் கனமழை பெய்தது, இதனால் ஓசூரில் 48 மிமீ, கெலவரப்பள்ளியில் 90 மிமீ, தேன்கனிக்கோட்டை 22 மிமீ,அஞ்செட்டியில் 4.80 மிமீ என மழை பெய்துள்ளது.
தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நேற்று அணைக்கு நீர் வரத்து 572 கன அடியாக வந்த நிலையில், இன்று காலை கெலவரப்பள்ளி அணைக்கு 904 கன அடியாக நீர் வரத்து உயர்ந்தது. அணையின் மொத்த உயரம் 44.28 அடியாக இருக்கும் நிலையில் , தற்போது 41.98 அடியாக நீர் மட்டம் உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின்பாதுகாப்பு கருதி, அந்த அணையில் இருந்து பாசன கால்வாய் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் 794.43 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் நுரை பொங்கி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.