திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேமலைக்கவுண்டன்புதூரில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி வீட்டில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டனர். அவர்களின் நகைகள் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் மாதங்கள் பல கடந்தும் கொலையாளிகள் பிடிபடாததால், தனிப்படையிடமிருந்து சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளக்கேத்தி என்ற கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி – பாக்கியம்மாள் கடந்த மே மாதம் 1-ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அதில், பாக்கியம்மாள் அணிந்திருந்த தாலி கொடி, வளையல் என 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

திணறிய போலீஸார்
இந்த இரு கொலை சம்பவங்களும் மேற்கு மண்டலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வந்தனர். சிவகிரி கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 12 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, 60 கிலோ மீட்டர் சுற்றளவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் நீலகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட காவலர்கள் உதவியுடன் பெருந்துறை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பகுதிகளில் தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்கள் குறிப்பாக வயதானவர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

மேலும், இரவு நேரங்களில் துப்பாக்கியுடன் வாய்க்கால் கரையோரம் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். புதிதாக சோதனைச்சாவடி அமைத்து வாகனங்களையும் சந்தேக நபர்களையும் விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகளைக் கைது செய்யாததைக் கண்டித்து மே 20-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் மக்களை திரட்டி நடத்தப்படும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உடல் கண்டெடுக்கப்பட்ட தினத்தில் இருந்து 50 மணிநேரங்களுங்கு முன்பு இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் இருவரின் தலையில் மட்டும் இரும்பு அல்லது கட்டை போன்ற ஆயுதத்தால் அடித்துள்ளது தெரியவந்தது.
பிடிக்கப்பட்ட மூவர்
இந்நிலையில், சிவகிரி சுற்றுவட்டார பகுதியில் ஈரோடு போலீஸார் நடத்திய விசாரணையில், சந்தேகத்துக்கு இடமான வகையில் கொலை நடைபெற்ற நாளில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரச்சலூரைச் சேர்ந்த மாதேஷ்வரன், ரமேஷ் மற்றும் அச்சியப்பன் ஆகிய மூவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதில், பல்லடம் மற்றும் சிவகிரியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த வயதான தம்பதியினரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தோட்டத்து வீட்டில் வசித்த முதியவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தது ஒரே மாதிரியாக இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினோம். அதில், தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அரச்சலூரைச் சேர்ந்த மாதேஸ்வரன், ரமேஷ் மற்றும் அச்சியப்பன் ஆகிய மூவர், சிவகிரியில் கொலை நடந்த தினத்தன்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் அவர்களைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் மூவரும் பழைய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. 2015-இல் திருட்டு வழக்கில் கைதாகி 9 மாதம் சிறைத் தண்டனை அனுபவித்து வெளியே வந்துள்ளனர். சிறையில் தொடங்கிய பழக்கம், சிறையைவிட்டு வெளியே வந்த பின்பும் தொடர்ந்துள்ளது.
நகைக்கடை உரிமையாளரும் கைது!
ராமசாமி தோட்டத்துக்கு தேங்காய் பறிக்கச் சென்றபோது, அவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டுள்ளனர். ஏப்ரல் 28-ஆம் தேதி இரவு 10 மணிக்கு ராமசாமியின் வீட்டருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து சென்று வெளியே இருந்த கழிவறைக்குள் மூவரும் ஒளிந்து கொண்டுள்ளனர். இரவு 12 மணி அளவில் கழிவறைக்கு வந்த பாக்கியம்மாளை கட்டையை வைத்து அடித்துக் கொலை செய்துள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த ராமசாமியையும் அதே கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், பாக்கியம்மாள் அணிந்திருந்த நகைகளை எடுத்துக் கொண்டு தப்பித்துள்ளனர். அந்த நகைகளை சென்னிமலைபாளையத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளரான ஞானசேகரனிடம் கொடுத்து உருக்கியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் சேமலைக்கவுண்டன்புதூரில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரையும் நகைக்காக இதேபோல் அடித்துக் கொலை செய்தததையும் மூவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். அத்துடன் 10-க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்களையும் செய்துள்ளதாக கூறியுள்ளனர். அதுதொடர்பாக போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்கவுள்ளோம்.
அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், கொலைக்குப் பயன்படுத்திய கையுறை, ராமசாமியின் செல்போன், உருக்கப்பட்ட பாக்கியம்மாளின் நகைகள் 82 கிராம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். இறந்து போனால் அடையாளம் சொல்ல முடியாது என்பதால் அடித்துக் கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையடித்த நகைகளை உருக்கிக் கொடுத்த நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரனும் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார்.