புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் கில்ஜித் பல்டிஸ்தான் மற்றும் லடாக்கிற்கான தேசிய சமத்துவக் கட்சியின் தலைவரும், சமூக ஆர்வலருமான பேராசிரியர் சஜ்ஜாத் ராஜா கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தீவிரவாத குழுக்கள் மற்றும் பாகிஸ்தானிடம் பயத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், உலகளவில் தற்போது அவர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதால் இனிமேல் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுவார்கள்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் முழுவதும் பல தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. உண்மையில், பாகிஸ்தானில் உள்ள சுமார் 50 சதவீத மசூதிகள் தீவிரவாதத்துக்கான மையங்களாக மாறியுள்ளன. அடையாளம் கண்டறிதலை தவிர்க்க இந்த முகாம்கள் இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், தாக்குதல் நடத்துவதற்கு தேவையான பயிற்சிகளை அவை அளிக்கின்றன. நாட்டின் வளர்ச்சியை விட தீவிரவாதத்தின் மீதுதான் பாகிஸ்தானுக்கு அதிகவெறி உள்ளது. கொள்கை, பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் ராணுவம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.