திருநெல்வேலி / தூத்துக்குடி: ஒட்டப்பிடாரத்தில் அம்மன் சிலையை பதுக்கியது தொடர்பாக திமுக பிரமுகர் உட்பட 4 பேர் கைதாகியுள்ள நிலையில், உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியினர் நெல்லை டிஐஜியிடம் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள பழைய இரும்க்பு கடையில் அம்மன் சிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் வனிதாராணி தலைமையிலான போலீஸார் கடந்த வாரம் அப்பகுதியில் பழைய இரும்புக் கடைகளை கண்காணித்தனர்.
ஒரு கடையில் சோதனை மேற்கொண்டபோது, அங்கு வெண்கலத்தினாலான 2 அடி உயர அம்மன் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடை உரிமையாளரான ஓட்டப்பிடாரம் வெற்றிவேலை(30) கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில், முப்புலிவெட்டி விக்னேஷ் (26), சாமிநத்தம் பிரதாப் (28), தங்க சதீஷ் (29) ஆகியோரையும் கைது செய்தனர். பின்னர் நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுதப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ், ஓட்டப்பிடாரம் ஒன்றிய திமுக இளைஞரணி நிர்வாகியாக உள்ளார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகரை சேர்ந்த புதிய தமிழகம் கட்சி வழக்கறிஞர் டி.ரமேஷ்குமார் உள்ளிட்டோர், நெல்லை சரக டிஐஜி மற்றும் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணியடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திமுக எம்எல்ஏக்கு தொடர்பு? – வெளிநாட்டுக்கு சிலை கடத்தியதாக ஓட்டப்பிடாரம் தங்க சதீஷ், பிரதாப், வெற்றிவேல், விக்னேஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் திமுகவை பின்புலமாகக் கொண்டவர்கள். ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா மற்றும் அவரது சகோதரர் முருகேசன் ஆகியோருக்கும் சிலை கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், நெல்லை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சரிவர விசாரிக்காமல், உண்மைக் குற்றவாளிகளை வழக்கில் இருந்து தப்பவைக்க சதி செய்வதாக தகவல்கள் கிடைக்கின்றன.
உண்மைக் குற்றவாளிகள் வழக்கிலிருந்து தப்பிவிடாமல் இருக்கவும், நீதியை நிலைநாட்டவும் இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களங்கப்படுத்த முயற்சி: இதனிடையே, சிலை கடத்தல் வழக்கில் ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா பெயரை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.