சிவகங்கை: சிங்கம்புணரி அருகே குவாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் தனியார் கல் குவாரியில் நேற்று காலை 400 அடி ஆழ பள்ளத்தில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது பாறைகள் சரிந்து விழுந்ததில் பொக்லைன் ஓட்டுநர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஜித் (28), மற்றும் முருகானந்தம் (49), ஆண்டிச்சாமி (50), ஆறுமுகம் (50), கணேசன் (43) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். மைக்கேல் (43) மதுரை தனியார் மருத்துனையில் அனுமதிக்கப்பட்டார்.
மற்றவர்கள் உடலை மீட்டநிலையில், பொக்லைன் இயந்திரத்துடன் ஹர்ஜித் உடல் பெரிய பாறைக்குள் சிக்கி கொண்டதால், மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து தேசிய மீட்பு படையினர் 30 பேர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் இரவு நேரமானதால் மீட்புப் பணி கைவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று (மே.22) காலை 6. 30 மணிக்கு ஆய்வாளர் கலையரசன் தலைமையிலான தேசிய மீட்பு படையினர், உதவி மாவட்ட அலுவலர் ஜெயராணி, நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையிலான சிங்கம்புணரி, திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருடன் இணைந்து 3 மணி நேரம் போராடி 9.30 மணிக்கு ஹரிஜித் உடலை மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீட்பு பணியை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பார்வையிட்டார்.
மேலும், கல் குவாரி உரிமையாளர் மேகவர்மன் மீது டிஎஸ்பி செல்வகுமார் தலைமையிலான எஸ்.எஸ்.கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே சென்னையில் இருந்து வந்த மகேஷ்சட்லா தலைமையிலான சுரங்கத்துறை அதிகாரிகள் கல்குவாரியில் விதிமீறல் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் அனுமதி வாங்கிய சர்வே எண்ணில் தான் குவாரி நடக்கிறதா என்பது குறித்தும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே விபத்துக்கு காரணமான கல் குவாரி உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மைக்கேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.