லக்னோ: வரும் 2027-ல் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும் என்று மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் 3 கட்டங்களாக 1.93 லட்சம் ஆசிரியர்களை பணியமர்த்த இருப்பதாக மாநில அரசு தனது எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரம் 2027 சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், பாஜக படுதோல்வி அடையும் என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புள்ளி விவரங்களின் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “1,93,000 ஆசிரியர் ஆட்சேர்ப்பு குறித்த விளம்பரம் பாஜகவை தாக்கும். 2027 தேர்தலில் பாஜகவின் தோல்விக்கான அரசியல் எண்கணிதம் இது.
1,93,000 ஆசிரியர்கள் பணியிட விவகாரத்தில் ஒரு பதவிக்கு குறைந்தது 75 வேட்பாளர்கள் என்று வைத்துக்கொண்டால், அப்போது இந்த எண்ணிக்கை 1 கோடியே 44 லட்சத்து 75,000. இவர்களின் குடும்பத்தில் இவர்களையும் சேர்த்து வா்களிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 3 என மதிப்பிட்டால், இந்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 25,000.
4 கோடியே 34 லட்சத்து 25,000 வாக்காளர்களை உத்தரப்பிரதேசத்தின் 403 சட்டமன்ற இடங்களால் வகுத்தால், இந்த எண்ணிக்கை ஒரு தொகுதிக்கு சுமார் 1,08,000. இவர்களில் பாதி பேர் பாஜக வாக்காளர்கள் என்று எடுத்துக்கொண்டால்கூட, (உ.பியில் தங்களுக்கு 50% வாக்கு இருப்பதாக பாஜக கூறி வருகிறது), மீதமுள்ள 54,000 வாக்குகளை பாஜக இழப்பது உறுதி. இந்த சூழ்நிலையில், 2027 சட்டமன்றத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்க வெற்றிக்குள் மட்டுப்படுத்தப்படும்.
காவல் பணி ஆட்சேர்ப்பு விஷயத்திலும் இந்த எண்கணிதம், அவர்களுக்கு எதிராக உள்ளது. இப்போது அனைவருமே இதுபோன்ற புள்ளிவிவரங்களை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். இது அரசியல் யதார்த்தத்தின் புள்ளிவிவரமாக மாறிவிட்டது.
இவை மட்டுமல்ல, உ.பி. மக்கள் பாஜக அரசாங்கத்தின் மீது ஏற்கனவே கோபத்தில் உள்ளனர். வேலையின்மை, பணவீக்கம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், ஊழல் உள்ளிட்ட காரணங்களால் மக்கள், பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். எனவே, 2027 தேர்தலில் உ.பி.யில் பாஜக தோல்வி அடைவது உறுதி. பிற்படுத்தப்பட்டோர் – தலித்துகள் – சிறபான்மையினர் இணைந்த எங்கள் அரசை நாங்கள் 2027ல் அமைப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.