புதுடெல்லி,
டெல்லியில் உள்ள குலாபி நகர் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் தாக்கூர்(வயது 25). இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், சுதாவின் தோழி ஒருவர், டெல்லிக்கு வேலை தேடி வந்த 17 வயது சிறுவனை முகேஷ் தாக்கூருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அந்த சிறுவனை முகேஷ் தாக்கூர் தனக்கு சொந்தமான வீட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு தங்கவைத்துள்ளார். இந்த நிலையில், கடந்த 19-ந்தேதி இரவு முகேஷ் தாக்கூரும், 17 வயது சிறுவனும் சேர்ந்து நன்றாக மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கு ஏறிய நிலையில், சிறுவன் வீட்டிற்கு செல்வதாக கூறி புறப்பட்டுச் சென்றார்.
பின்னர் நள்ளிரவு நேரத்தில் முகேஷ் தாக்கூர் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனது மனைவியுடன் அந்த சிறுவன் தகாத உறவில் இருந்ததை கண்டு முகேஷ் அதிர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலை சுதா வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டுச் சென்ற நிலையில், முந்தைய நாள் இரவு நடந்த சம்பவம் குறித்து சிறுவனிடம் முகேஷ் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முகேஷ், வீட்டில் இருந்த சிலிண்டரை எடுத்து சிறுவனின் தலையை அடித்து சிதைத்தார். இதனால் சிறுவன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அறை முழுவதும் ரத்தம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், காலை சுமார் 9.30 மணியளவில் வீட்டிற்குள் இருந்து ரத்தம் வழிந்து வருவதை அக்கம்பக்கத்தினர் கண்டனர்.
இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சிறுவனை முகேஷ் தாக்கூர் அடித்து கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது முகேஷ் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். அவரை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து முகேஷ் தாக்கூரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.