புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பயன்படுத்திய அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது. இந்தச் சூழலில் பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது அகமது ஷெரீப் சவுத்ரி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வில் பேசிய ஷெரீப் சவுத்ரி, “எங்கள் தண்ணீரை நீங்கள் தடுத்தால், உங்கள் மூச்சை அடைத்துவிடுவோம்” என்று கூறியுள்ளார்
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின் மூளையாக இருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், இதே வார்த்தையை பயன்படுத்தி சமீபத்தில் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக ஹபீஸ் சயீத் சமூக ஊடகங்களில் பேசிய வீடியோ வைரலானது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஏப்ரல் 23 அன்று சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இதுகுறித்து, “ரத்தமும் நீரும் ஒன்றாகப் பாய முடியாது; பேச்சும் பயங்கரவாதமும் ஒன்றாகச் செல்ல முடியாது” என்று இந்தியா தெரிவித்தது.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கதை: 1947இல் இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலை அடைந்து தனி நாடுகள் ஆயின. புதிய நாடுகளுக்கு இடையே வரையப்பட்ட எல்லைக்கோடு சிந்து நதியை ஊடறுத்தது. இந்த நதி திபெத்தில் உற்பத்தியாகி இந்தியாவில் 780கி.மீ. தொலைவும் பாகிஸ்தானில் 2,170 கி.மீ. தொலைவும் ஓடி, அரபிக் கடலில் கலக்கிறது. இது தவிர, சிந்து நதியில் ஐந்து கிளை நதிகள் சங்கமிக்கின்றன.
ஆக, ஆறு நதிகள். இவற்றின் நீரை எவ்விதம் பங்கிட்டுக்கொள்வது என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டாயின. நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் 1960-ல் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதுதான் சிந்து நதிநீர் ஒப்பந்தம். மேற்குறிப்பிட்ட ஆறு நதிகளில் மூன்று நதிகள் (ராவி, பியாஸ், சட்லஜ்) ‘கிழக்கு நதிகள்’ என்றும், அடுத்த மூன்று நதிகள் ‘மேற்கு நதிகள்’ (சிந்து, ஜீலம், செனாப்) என்றும் அழைக்கப்படுகின்றன.
ஒப்பந்தத்தின்படி கிழக்கு நதிகளின் நீரை இந்தியா முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்கு நதிகளின் நீர் பாகிஸ்தானுக்கு உரியது. இந்தப் பங்கீட்டின்படி மொத்த நீரில் 20% இந்தியாவுக்கும் 80% பாகிஸ்தானுக்கும் கிடைக்கும்.
இந்தியாவும் பாகிஸ்தானும் மூன்று முறை போரிட்டிருக்கின்றன (1965, 1971, 1999). பாகிஸ்தான் பல முறை எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நடத்தியிருக்கிறது. சமீப காலங்களில் மேற்கு நதிகளின் குறுக்கே கிருஷ்ணகங்கா அணை, ரேட்டல் புனல் மின் நிலையம் முதலானவற்றை இந்தியா நிர்மாணித்தபோது, பாகிஸ்தான் இயன்றவரை முட்டுக்கட்டை போட்டது. 2023 முதல் இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்திவந்தது; பாகிஸ்தான் உடன்படவில்லை.
ஆனால், அப்போதெல்லாம் இந்த ஒப்பந்தத்தை இந்தியா முறிக்கவில்லை. இப்போது முதற்கட்டமாக ஒப்பந்தத்தை இடைநிறுத்தியிருக்கிறது. சிந்து நதியால் பாகிஸ்தானில் பயனுறும் பாசனப் பரப்பு 160 லட்சம் ஹெக்டேர் ஆகும். இதிலிருந்து பெறப்படும் விளைபொருள்கள் பாகிஸ்தானின் உள்நாட்டு உற்பத்தியில் கால் பங்கு ஆகும். கராச்சி, லாகூர் உள்ளிட்ட பல நகரங்களுக்குக் குடிநீர் ஆதாரமாகவும் சிந்து நதி விளங்குகிறது.