மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் இருந்து, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு தேவையான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக சாலையோரம் ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. அதன்படி, மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அன்னூர் சாலையில் உள்ள நடூர் வழியாக திருப்பூருக்கு பகிர்மானக் குழாய் செல்கிறது.
இந்நிலையில், இன்று மதியம் நடூர் பகுதியில் செல்லும் ராட்சத குழாயில், அழுத்தம் தாங்காமல் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தண்ணீர் வெளியேறி, சுமார் 50 அடி உயரத்துக்கு நீரூற்று போல் பீய்ச்சியடித்தது. இதைக் காண அங்கு ஏராளமானோர் திரண்டனர். பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலையில் வழிந்து வீணாணது. இதனால் அந்த சாலை முழுவதும் வெள்ளக்காடானது.
மேலும், குழாய் உடைப்பால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரத்துக்கு பின்னர், அவ்வழியாக மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.