ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் தாத்தா, பாட்டியுடன் வசிக்கும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி, திடீரென மாயமனார். அவரைக் கண்டுபிடித்து தரும்படி மாணவி தரப்பில் ஆவடி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதனால் போலீஸார் மாணவியின் ன் நட்பு வட்டாரத்தில் விசாரணை நடத்தி அவரைத் தேடிவந்தனர். இந்தச் சமயத்தில்தான் மாணவியின் தாத்தாவுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், தாம்பரத்தில் உள்ள லாட்ஜ்ஜில் அறை எடுத்ததற்கு நன்றி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் மாணவியின் தாத்தா, இந்தத் தகவலை ஆவடி போலீஸாரிடம் தெரிவித்தார். உடனடியாக சம்பந்தப்பட்ட லாட்ஜுக்கு சென்று போலீஸார் விசாரித்தனர். அங்கு மாயமான மாணவியும் இளைஞர் ஒருவரும் அறையில் இருந்தனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்கு வந்தனர்.

மாணவியிடம் மகளிர் போலீஸார் தனியாக விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து ஆவடி போலீஸார் கூறுகையில், “மாணவிக்கு இன்ஸ்டா மூலம் பொள்ளாச்சியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் இருவரும் வீடியோ காலில் மணிக்கணக்கில் பேசி வந்திருக்கிறார்கள். இதையடுத்து மாணவியைச் சந்திக்க சூர்யா பொள்ளாச்சியிலிருந்து ஆவடிக்கு வந்திருக்கிறார். பின்னர் மாணவியை அழைத்துக் கொண்டு தாம்பரத்தில் உள்ள லாட்ஜுக்கு சென்றிருக்கிறார். அப்போது லாட்ஜின் ஊழியர்கள், அறையை முன்பதிவு செய்ய சூர்யாவிடம் செல்போன் நம்பரை கேட்டிருக்கிறார்கள். அதற்கு சூர்யா, தன்னுடைய செல்போன் நம்பரைக் கொடுக்காமல் அமைதியாக இருந்திருக்கிறார். இதையடுத்து மாணவி, தன்னுடைய தாத்தாவின் செல்போன் நம்பரைக் கொடுத்து அறையை முன்பதிவு செய்திருக்கிறார். அந்த மெசேஜ் மூலம்தான் மாணவியை மீட்டோம். மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. அதனால் அவரைக் கடத்திச் சென்ற குற்றத்துக்காக சூர்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்திருக்கிறோம்” என்றனர்.
இந்த வழக்கை விசாரித்த போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “மாணவியின் அப்பா அவரைப் பிரிந்து சென்றுவிட்டார். அம்மா ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதனால்தான் மாணவி, தன்னுடைய தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்து வந்திருக்கிறார். மாணவியை சரிவர கண்காணிக்காததால் அவர் எந்நேரமும் சமூக வலைதளங்களிலேயே மூழ்கியிருந்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் பொள்ளாச்சியைச் சேர்ந்த சூர்யாவுடன் பழகி இந்த விபரீத செயலில் ஈடுபட்டிருக்கிறார். ஏற்கெனவே மாணவி, இதற்கு முன்பு இதே போல ஒரு செயலில் ஈடுபட்டிருக்கிறார்” என்றார்.