கல்விநிதி கிடைக்குமென நம்பிக்கையோடு இருப்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க வரும்படி அழைப்பு விடப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டம் நிறைவடைந்ததும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு என்ன தேவை என்பதை பட்டியலிட்டு பேசினேன். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிக்கை வைத்தோம். கோவை, மதுரையில் மெட்ரோ திட்டங்கள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழகத்திற்கான ரூபாய் 2,200 கோடி கல்விநிதி கிடைக்கும் என நம்புகிறேன். கல்விநிதி கிடைக்கும் என நம்பிக்கையோடு இருப்போம்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினோம். செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழிச்சாலையாக்க கோரிக்கை விடுத்தோம்.

டாஸ்மாக் சோதனை விவகாரத்தில் தலைமை நீதிபதி தெரிவித்த கருத்து நியாயமானதுதான். அமலாக்கத்துறை நடவடிக்கை அரசியல் ரீதியானது. அரசியல் ரீதியாக வரும் சோதனைகளை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திப்போம். டாஸ்மாக், குவாரியில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை கூறுவது பொய்.

சோனியா காந்தி உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது; அரசியலும் பேசப்பட்டது. என்னிடம் வெள்ளை கொடியும் இல்லை; எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள காவி கொடியும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.