துப்பாக்கியை காட்டி அரசு அதிகாரியை மிரட்டிய வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. பரன் மாவட்டம், அன்டா சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக (எம்எல்ஏ) குன்வர்லால் மீனா இருந்தார். கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அரசு அதிகாரியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக மீனா மீது புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த மே 7-ம் தேதி உறுதி செய்தது.
இந்நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “குன்வர்லால் மீனாவுக்கு உச்ச நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு 2 வாரங்கள் கடந்தும், அவரை சதகுதிநீக்கம் செய்யாமல் சட்டப்பேரவைத் தலைவர் வாசுதேவ் தேவ்னானி காலம் தாழ்த்துகிறார்” என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் தேவ்னானி, குன்வர்லால் மீனாவை தகுதி நீக்கம் செய்து நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். அவமதிப்பு வழக்கு தொடுத்த பிறகுதான் தேவ்னானி நடவடிக்கை எடுத்தார் என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
இதுகுறித்து தேவ்னானி கூறும்போது, “எந்த ஒரு அழுத்தத்துக்கும் அடிபணிந்து நான் செயல்பட மாட்டேன். அரசியல் சாசன நெறிமுறைகள் மற்றும் சட்டத்தின்படிதான் நான் எந்த ஒரு முடிவையும் எடுப்பேன். இந்த விவகாரத்தில் அரசு வழக்கறிஞரின் சட்ட ஆலோசனை முறைப்படி கிடைத்த பிறகு நடவடிக்கை எடுத்துள்ளேன்” என்றார்.
ராஜஸ்தானில் நீதிமன்றம் விதித்த தண்டனையால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 2-வது எம்எல்ஏ இவர் ஆவார். ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏ பி.எல்.குஷ்வாஹா தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.