நாயகன் திரைப்படம் வெளியாகி 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் இணைந்துள்ள திரைப்படம் தக் லைஃப்.
வருகின்ற ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்றையதினம் சென்னையில் நடைபெற்றது. ரஹ்மான் இசைக்கச்சேரியுடன் கமல்ஹாசன், சிலம்பரசன், மணிரத்னம், நாசர், ஜோஜு ஜார்ஜ், த்ரிஷா, அபிராமி, அன்பறிவு சகோதரர்கள், சிவராஜ்குமார், அஷோக் செல்வன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

தக் லைஃப் படத்தில் விண்வெளி நாயகா, அஞ்சு வண்ண பூவே ஆகிய இரண்டு பாடல்களை எழுதியுள்ளார் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா.
“‘கண்ணே கலைமானே’தான் நான் எழுத வரக் காரணம்”
இசை வெளியீட்டு விழாவில் பேசிய கார்த்திக் நேத்தா, “மணி ரத்னம் சார் – ரஹ்மான் சார் இணையும் படத்தில் எழுத வேண்டும் என்பது என்னுடைய 25 ஆண்டுகால கனவு. நான் 2000ம் ஆண்டு சென்னைக்கு பாட்டெழுத வந்த நாள்முதலே எனக்கு இந்த கனவு உள்ளது.
அந்த கனவின் கரு இன்றைக்கு இரட்டைப் பிள்ளைகளைப் பெற்றிருக்கிறது. அந்த இரண்டு பாடலையுமே நீங்க கேட்க போறீங்க.

கமல் சார் நடித்திருந்த மூன்றாம் பிறை படத்தில்வரும் கண்ணே கலைமானே பாடல்தான் என்னை சினிமாவை நோக்கி தள்ளியது. அந்த பாடலில் வரும் வரிகளைப் போல ஒரு வரியை எழுதிவிட வேண்டும் என்பதற்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன்.
அதில் ‘ஏழை என்றால் அதிலொரு அமைதி’ என்ற வரி வரும், அதை நோக்கித்தான் நான் ஓடிகிட்டு இருக்கேன். தமிழ் உள்ள எரிஞ்சுகிட்டே இருக்கு.
“ரஹ்மான் சார் பாடுவதைக் கேட்டு அழுதுவிட்டேன்”
இந்த படத்தில் அஞ்சு வண்ண பூவே எழுதும்போதே என்னுடையை அன்னையை நினைத்துக்கொண்டேன். என் தாய் முழுவதுமாக பேனாவுக்குள் வந்தபிறகு அதுவாகவே நிகழ்ந்தது இந்த பாடல்.
இப்போது ரஹ்மான் சார் அந்த பாடலை பாடியபோது என்னை அறியாமல் அழுதுவிட்டேன். சொற்கள் எல்லாம் கண்ணீராக உள்ளே தங்கிவிட்டதால் பேசுவதற்கு எதுவும் தோன்றவில்லை. உள்ளே போன கண்ணீரெல்லாம் எதிர்காலத்தில் கவிதைகளாக வரும்.

“20 வருடங்களுக்குப் பிறகு சிம்புவைப் பார்க்கிறேன்”
இந்த மேசையில் மணி சாரிடம் உதவி இயக்குநர்களாக இருக்கக் கூடிய தனா, அன்பு, ஆதித்யா மூன்றுபேருக்கும் நான் நன்றி சொல்லிக்கிறேன். இந்த பாடலுக்காக என்னை வழிநடத்தியது அவர்கள்தான். சிவாசாருக்கும் நன்றி.
எல்லாவற்றுக்கும் மேலாக அன்பு நண்பன் சிம்புவுக்கு நன்றி. நான் என்னுடைய முதல் பாடல் தொட்டி ஜெயா படத்தில் தான் எழுதினேன். 20 வருடங்களுக்குப் பிறகு உங்களை மீண்டும் நேரில் பார்க்கிறேன். மிகவும் நிறைவாக இருக்கிறது.
பாடல்களைப் பாடிய அனைவருக்கும் ரஹ்மான் சாருக்கும் நன்றிகள். த்ரிஷா மேம் உங்க முகத்தை வைத்துதான் காதலே காதலே தனிப்பெரும் துணையேன்னு 96 படத்தில் எழுதினேன். உங்களுக்கும் நன்றி.” எனப் பேசினார்.