கேரள கடற்கரையில் அபாயகரமான சரக்குகளுடன் மூழ்கிய லைபீரிய கப்பல் – 24 பணியாளர்களும் மீட்பு

திருவனந்தபுரம்: கேரளக் கடற்கரையில் அபாயகரமான சரக்குகளுடன் சென்ற லைபீரிய கொள்கலன் கப்பல் மூழ்கியது. அதில் இருந்த 24 பணியாளர்களையும் இந்தியக் கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடலோரக் காவல்படை மீட்டது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லைபீரியக் கொள்கலன் கப்பல் எம்எஸ்சி எல்சா 3 (Iஎம்ஓ எண். 9123221) இன்று (மே 25, 2025) காலை 0750 மணியளவில் கொச்சி கடற்கரையில் மூழ்கியது. அதில் இருந்த 24 பணியாளர்களும் மீட்கப்பட்டனர். 21 பேரை இந்தியக் கடலோரக் காவல்படையும் மூன்று பேரை இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் சுஜாதாவும் மீட்டன. எம்எஸ்சி எல்சா 3 கப்பல் 640 கொள்கலன்களுடன் மூழ்கியது. அவற்றில் 13 ஆபத்தான சரக்குக் கொள்கலன்களும் 12 கால்சியம் கார்பைடு கொள்கலன்களும் இருந்தன. அதில் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் உலை எண்ணெய் ஆகியவையும் ஏற்றப்பட்டிருந்தன.

மே 24 அன்று, விழிஞத்திலிருந்து கொச்சிக்குச் செல்லும் வழியில் எம்எஸ்சி எல்சா 3 என்ற கப்பல் மூழ்கத் தொடங்கி இருந்தது. உலகளாவிய தேடல் மற்றும் மீட்பு நெறிமுறைகளின்படி, இந்தியக் கடலோரக் காவல்படை ரோந்து கப்பல்கள் மற்றும் வணிகக் கப்பல்களான எம்வி ஹான் யி மற்றும் எம்எஸ்சி சில்வர் 2 ஆகியவையும் உதவிக்காகத் திருப்பிவிடப்பட்டன.

மாலைநேரப் பிற்பகுதியில், ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா,பிலிப்பைன்ஸ் நாட்டவர் உட்பட 24 பணியாளர்களில் 21 பேர் மீட்கப்பட்டனர். மீட்பு ஏற்பாடுகளுக்கு உதவ மூன்று மூத்தப் பணியாளர்கள் கப்பலில் இருந்தனர். இருப்பினும், கப்பலின் நிலை இரவு முழுவதும் மோசமடைந்து, மே 25, 2025 அன்று அது கவிழ்ந்தது. மூன்று பணியாளர்களும் கப்பலை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் ஐஎன்எஸ் சுஜாதா அவர்களை மீட்டது. இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.