Doctor Vikatan: என் வயது 32. வேலைக்குச் செல்கிறேன். வீட்டிலும் சமையல், குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, மாமனார், மாமியாரின் தேவைகளைப் பார்த்துப் பார்த்து செய்வது என எல்லா பொறுப்புகளையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், எனக்கு ‘நான் சரியான அம்மா இல்லையோ, சரியான மனைவி இல்லையோ, சரியான ஊழியர் இல்லையோ…’ என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. எல்லா வேலைகளையும் முழுமையாகச் செய்கிறேனா என சந்தேகம் வருகிறது. இது எப்படிப்பட்ட மனநிலை? கோளாறு என்னிடம்தானா, இதற்கு மனநல சிகிச்சை தேவையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

உங்களுக்கு இருப்பதைப் போன்ற மனநிலையை உளவியலில் ‘ சூப்பர்வுமன் சிண்ட்ரோம்’ என்று சொல்கிறோம். அதாவது, சூப்பர்மேன் போல…. சூப்பர்வுமனாக இருக்க முயல்வது. சூப்பர்வுமன் சிண்ட்ரோம் உள்ள பெண்கள் அதிக வேலை செய்பவர்களாக, அதீத அர்ப்பணிப்பு உள்ளவர்களாக, அளவுக்கதிகமாக களைத்துப் போகிறவர்களாக, ஸட்ரெஸ்ஸுக்கு உள்ளாகிறவர்களாக இருக்கலாம். ஆறுதலான ஒரு விஷயம் என்ன தெரியுமா? உங்களைப் போன்ற சூப்பர்வுமென் இங்கே ஏராளம் பேர் இருக்கிறார்கள்.
அம்மாக்கள், வேலைக்குச் செல்கிறவர்கள், செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள், இல்லத்தரசிகள் என யாருக்கு வேண்டுமானாலும் இந்த சிண்ட்ரோம் வரலாம். இவ்வளவு ஏன்… பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இளம் பெண்களுக்குக் கூட வரலாம் என்கின்றன ஆய்வுகள்.
ஒரு வேலையைச் சரிவரச் செய்ய முடியாமல் போகும்போது ‘நான் சரியில்லையோ… இன்னும் அதிகம் ஓடணுமோ, உழைக்கணுமோ’ என்ற எண்ணம் சிலருக்கு வரலாம். சுமக்கும் எல்லாப் பொறுப்புகளிலும் ‘ஆகச் சிறந்தவள்’ என்ற கிரீடத்துக்கு ஆசைப்பட்டு ஓடுகிற மனநிலையைத்தான் ‘சூப்பர்வுமன் சிண்ட்ரோம்’ என்கிறது உளவியல். அப்படி ஆகச்சிறந்தவளாக தன்னை நிரூபிக்க முடியாத நிலையில் அந்தப் பெண்ணுக்கு அதீத மன அழுத்தம் ஏற்படுவதையே இது குறிக்கிறது. 100 சதவிகிதம் பர்ஃபெக்ட் ஆக இருப்பது யாருக்கும் சாத்தியமற்றது. Imperfect is perfect too என்பதை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.

எல்லாவற்றையும் தலையில் சுமக்கும் தியாகிப்பட்டம் தேவையற்றது. தேவைப்படும்போது உதவி கேளுங்கள். அடுத்தவர் உதவியோடு ஒரு வேலையைச் செய்யும்போது நீங்கள் எதிர்பார்க்கும் பர்ஃபெக்ஷன் இன்னும் அதிகரிக்கலாம். இயலாமையை வெளிப்படுத்துவதில் குற்ற உணர்வு தேவையில்லை.
உங்களை அழுத்தும் விஷயங்களை, வேதனைகளை யாரிடமாவது மனம் விட்டுப் பேசுங்கள். உங்கள் வாழ்க்கையை உங்கள் விருப்பப்படி வாழும் உரிமை உங்களுக்கு உண்டு. எப்போதும் எல்லோருக்கும் ‘யெஸ்’ சொன்னால்தான் நீங்கள் நல்லவராக, வல்லவராக அறியப்படுவீர்கள் என்றில்லை. தேவைப்படும் இடங்களில் ‘நோ’ சொல்வதும்கூட உங்கள் ஆளுமையின் அழகான வெளிப்பாடுதான்.
இந்த மனநிலையிலிருந்து விடுபட தியானப் பயிற்சி, யோகா, உடற்பயிற்சிகள் போன்றவை உங்களுக்கு உதவலாம். உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி மன அழுத்தம் அதிகரிக்கும்போது மனநல சிகிச்சையை நாடலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.