திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் ஜூன் 2-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடக்கிறது. ஜூன் 1-ம் தேதி அங்குரார்ப்பணத்துடன் விழா தொடங்குகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது.
காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை பாரம்பரிய முறைப்படி தூய்மைப்பணி நடைபெறும். கோவில் வளாகம், சுவர், கூரை, பூஜைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்திய பின் வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படும். 10 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஜூன் 2-ம் தேதி கொடியேற்றம், ஜூன் 6-ம் தேதி கருட வாகன சேவை, ஜூன் 9-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஜூன் 10-ம் தேதி சக்கர ஸ்நானம் மற்றும் கொடியிறக்கம் நடைபெறுகிறது.