Chennai Super Kings: ஐபிஎல் 2025 சீசன் நிறைவடைந்து ஒரு மாதம் நெருங்கிவிட்டது. 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணியும் அதன் முதல் கோப்பையை வென்றிருக்கிறது. பஞ்சாப் 11 ஆண்டுகளுக்கு பின்னர் பிளே ஆப் சுற்றுக்கும், இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றிருந்தது.
குஜராத், மும்பை, டெல்லி அணிகளும் சிறப்பாகவே விளையாடியிருந்தன. சன்ரைசர்ஸ் அணி கடைசி கட்ட போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து 6வது இடத்தில் நிறைவு செய்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் எழுச்சியால் லக்னோ, கொல்கத்தா அணிகள் அடுத்தடுத்த இடங்களுக்கு தள்ளப்பட்டன. 9வது இடத்தையும் ராஜஸ்தானும், 10வது இடத்தையும் சிஎஸ்கேவும் பெற்றன.
CSK: சஞ்சு சாம்சனை இழுக்கும் சிஎஸ்கே?
சிஎஸ்கே அதன் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக கடைசி இடத்தில் முடித்துள்ளது. எனவே, சிஎஸ்கே அடுத்த சீசனில் குறைந்தபட்சம் பிளே ஆப் சுற்றுக்காவது தகுதிபெற துடிக்கும். 2023இல் கோப்பையை வென்ற பிறகு, ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கேவின் கேப்டன்ஸியை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதிபெறவில்லை. இந்த சீசனில் காயம் காரணமாக ருதுராஜ் தொடரில் இருந்து விலக, தோனிதான் பல போட்டிகளில் கேப்டன்ஸியை கவனித்துக்கொண்டார்.
இந்தச் சூழலில், தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பது உறுதியாகாத நிலையில், சிஎஸ்கே – ராஜஸ்தான் இடையே டிரேடிங் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், சிஎஸ்கே 1-2 வீரர்களை கொடுத்து சஞ்சு சாம்சனை டிரேட் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. சிஎஸ்கே அதிகாரி ஒருவர் ஊடகத்திடம் கூறுகையில், “நாங்கள் நிச்சயமாக சஞ்சு சாம்சனை பரிசீலிப்போம். அவர் ஒரு இந்திய பேட்ஸ்மேன், அவர் ஒரு கீப்பர் & தொடக்க வீரர். எனவே அவர் கிடைத்தால், அவரை எங்கள் அணியில் சேர்த்துக் கொள்வதற்கான ஆப்ஷனை நிச்சயமாகப் பார்ப்போம்.
CSK: சஞ்சு சாம்சன் தேவையில்லை… 3 முக்கிய காரணங்கள்
அவரை யாருடன் டிரேட் செய்வது என்பதை நாங்கள் இன்னும் பரிசீலிக்கவில்லை. ஏனெனில் விவகாரம் அவ்வளவு தூரம் செல்லவில்லை, ஆனால் ஆம், கருத்தளவில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்” என கூறியிருக்கிறார். இப்படி சிஎஸ்கே சஞ்சு சாம்சன் மேல் ஆர்வமாக இருந்தாலும், தற்போதைய சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் தேவையில்லை, அதற்கான 3 முக்கிய காரணங்களை இங்கு காணலாம்.
1. ஓப்பனிங்கில் பிரச்னை வரும்
ஏற்கெனவே ஆயுஷ் மாத்ரே என்ற இந்திய பேட்டர் சிஎஸ்கேவுக்கு செட்டாகிவிட்டார். அவரும் அதிரடி பாணி வீரர் ஆவார். இளம் வீரர் வேறு. இப்படியிருக்க, ஆயுஷ் மாத்ரே உடன் வெளிநாட்டு தொடக்க வீரர் ஒருவரை விளையாட வைப்பதுதான் சிறந்த காம்பினேஷனாக இருக்கும். சிஎஸ்கே கோப்பையை வென்ற ஆண்டுகளில் ஓப்பனர் அதிக ரன்களை அடித்திருப்பார், ஓப்பனிங் ஜோடியில் ஒருவர் வெளிநாட்டவராகவும், இந்தியராகவும் இருப்பார்கள். இந்த பார்முலா சிஎஸ்கேவுக்கு கைக்கொடுத்துள்ளது. தற்போது சஞ்சு சாம்சன் ஓப்பனிங்கில் விளையாடி வருவதால் அவரை சிஎஸ்கேவுக்கு அழைத்து வருவது காம்பினேஷனில் பிரச்னை வரும்.
2. கேப்டன்ஸி சிக்கல்
இன்னும் ருதுராஜ் கெயக்வாட்டை தன்னை ஐபிஎல் அரங்கில் முழுமையாக கேப்டனாக நிலைநிறுத்திக்கொள்ளவில்லை. சஞ்சு சாம்சனும் இதுவரை ராஜஸ்தானுக்கு கோப்பையை வென்றுகொடுத்தது இல்லை. எனவே ருதுராஜ் கெய்க்வாட்டிடம் இருந்து சாம்சனுக்கு கேப்டன்ஸி பொறுப்பை வழங்குவதும் அவ்வளவு சரியாக இருக்காது. ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் 3இல் விளையாடி வருகிறார். சஞ்சு சாம்சன் வந்தாலும் அவர் ஓப்பனிங்கிலும் விளையாட வைக்க முடியாது, நம்பர் 3 இடத்திலும் விளையாட வைக்க இயலாது. ருதுராஜ் கெய்க்வாட் இல்லாத சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சனை எடுப்பதில் சிக்கல் இருக்காது. அதற்கான வாய்ப்புகள் குறைவு
3. அதிக தொகை மற்றும் வீரர்கள் மாற்றம்
சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.18 கோடி கொடுத்து தக்கவைத்திருக்கிறது. ஒருவேளை சாம்சன் டிரேட் செய்யப்பட்டால் நிச்சயம் ரூ.18 கோடிக்கு குறையாமல் எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி சஞ்சு சாம்சனை டிரேட் செய்தாலும் தூபே, அஸ்வின் போன்ற நட்சத்திர வீரர்களை கைமாற்றிவிட வேண்டும். அவர் மினி ஏலத்திற்கு வந்தாலும் அதிக தொகைக்கு எடுக்க நேரிடும். இந்தளவிற்கு தொகையை கொடுப்பதற்கு பதில் நல்ல இளம் விக்கெட் கீப்பர் பேட்டரை தோனிக்கு பேக்அப்பாக கூட எடுத்துக்கொள்ளலாம்.
இத்தனை சிக்கல்கள் இருக்க ஒரு நட்சத்திர விக்கெட் கீப்பரை சிஎஸ்கே எடுக்க வேண்டும் என்பதில்லை. அவர் தென்னிந்தியாவின் முகமாக இருப்பதாலும், இந்திய அணியில் தற்போது விளையாடி வரும் காரணத்தினாலேயே சிஎஸ்கே அவருக்கு முக்கியசத்துவம் அளிப்பதாக தெரிகிறது. ஆனால் தற்சமயம் சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்கு தேவையில்லாத ஆணிதான். இதில் மாற்றுக்கருத்தும் கூட பலருக்கும் இருக்கலாம்.