புதுச்சேரி,
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த பாஜகவை சேர்ந்த சாய்.சரவணன்குமார், நியமன எம்.எல்.ஏ.க்களான வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் கட்சி பணிக்கு செல்வதாக கூறி கடந்த 25-ந்தேதி தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சராக ஜான்குமாரையும், நியமன எம்.எல்.ஏ.க்களாக முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், இந்து முன்னணி முன்னாள் தலைவர் செல்வம், காரைக்கால் தொழில் அதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் ஆகியோரை நியமிக்க மத்திய அரசுக்கு கடந்த 28-ந்தேதி பட்டியல் அனுப்பப்பட்டது.
வழக்கமாக மத்திய அரசுக்கு இதுபோன்ற பட்டியல் அனுப்பும்போது ஓரிரு நாட்களில் அனுமதி கிடைத்துவிடும். ஆனால் இப்போது பட்டியல் அனுப்பி 5 நாட்களுக்கு மேலாகியும் மத்திய அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. இதனால் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அனுமதி கிடைக்காதது தொடர்பாக ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துகளை கூறி விவாதித்து வருகின்றனர்.
இதனிடையே இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.க்கள் பட்டியலுக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்றும், ஒப்புதல் கிடைத்தவுடன் அவர்கள் பதவியேற்று கொள்வார்கள் என்றும் கூறினார். மத்திய அரசு பட்டியலுக்கு இப்போது ஒப்புதல் அளித்தாலும் பதவியேற்பு விழா வருகிற 7-ந்தேதிதான் நடைபெறும் என்று கூறப்படுகிறது.