CSK குறிவைத்திருக்கும் அதிரடி வெளிநாட்டு வீரர்… மிடில் ஆர்டர் பலமாகும் – மினி ஏல பிளான்!

IPL 2026 CSK Squad Players List: சிஎஸ்கே அணி இதுவரை ஐபிஎல் வரலாற்றில் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் முடித்தே இல்லை. இதுமட்டுமின்றி, 18 ஆண்டுகளாக கட்டிக்காத்து வந்த அத்தனை சாதனைகளும், பெருமைகளும் ஒரே சீசனில் தவிடுபொடியாகின. எம்எஸ் தோனி (MS Dhoni) கட்டியெழுப்பிய அந்த மஞ்சள் சாம்ராஜ்யம், ஒரே சீசனில் பெரியளவில் ஆட்டம்  கண்டிருக்கிறது.

IPL 2026 CSK: தோனிக்காக சிஎஸ்கே இதை செய்யுமா?

தற்காலிக கேப்டனாக உள்ள வந்த தோனியால் கூட சிஎஸ்கே இந்த சீசனில் (Chennai Super Kings) மீட்க முடியவில்லை. அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா, அடுத்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஸியை பெறுவாரா, சஞ்சு சாம்சன் (Sanju Samson) போன்ற நட்சத்திர வீரரை சிஎஸ்கே கொக்கிப்போட்டு தூக்க காத்திருக்கிறதா என பல கேள்விகள் ரசிகர்களிடம் இருக்கிறது. சிஎஸ்கேவும் நிச்சயம் 2026 சீசனை வெற்றிகரமானதாக மாற்றி தோனிக்கு சர்வதேச அரங்கில் கூட கிடைக்காத அந்த சிறந்த Farewell போட்டியை அமைத்துக் கொடுக்க வேண்டும் என திட்டமிடும்.

IPL 2026 CSK: எப்போதோ ரெடியாகிவிட்ட சிஎஸ்கே

அப்படியிருக்க, வரும் மினி ஏலத்தில் சிஎஸ்கே (CSK) பெரிய திட்டமிடல்களுடன் வரும் எனலாம். கடந்த சீசன் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே சிஎஸ்கே அணி பல முக்கிய வீரர்களை எடுத்துவிட்டது எனலாம். உதாரணத்திற்கு, ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரேவிஸ், உர்வில் பட்டேல் போன்ற வீரர்கள் காயமடைந்த வீரர்களுக்கு மாற்றாக எடுத்தது. இவர்கள்தான் சிஎஸ்கேவுக்கு தற்போது நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிறார்கள். இருப்பினும் சிஎஸ்கேவுக்கு இன்னும் சில தேவைகள் இருக்கின்றன, இன்னும் சில இடங்களில் அனுபவ வீரர்கள் தேவை எனலாம். 

IPL 2026 CSK: சிஎஸ்கேவுக்கு ஆல்-ரவுண்டர் முக்கிய தேவை

ஓப்பனிங்கில் ஒரு வீரர் நிச்சயம் தேவை. கான்வே, ரச்சின் ஆகியோரில் ஒருவர்தான் அந்த இடத்தை நிரப்ப வேண்டும். ஒருவேளை அந்த இடத்தில் ருத்ராஜே (Ruturaj Gaikwad) விளையாடுகிறார் என்றால் கான்வே, ரச்சினை கழட்டிவிட்டு மிடில் ஆர்டரில் ஒரு வெளிநாட்டு ஆல்-ரவுண்டரை சிஎஸ்கே நிச்சயம் எடுக்க வேண்டும். டிவால்ட் பிரேவிஸ், நூர் அகமது, மதிஷா பதிரானா/நாதன் எல்லிஸ் என மூன்று வெளிநாட்டவர்கள் உறுதியாக அடுத்தாண்டு பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள். ஓப்பனிங்கில் வெளிநாட்டு வீரர் இல்லாமல் ருதுராஜ் – ஆயுஷ் மாத்ரே ஜோடியே களமிறங்குகிறது என்றால் பிராவோ போன்ற ஒரு ஆல்-ரவுண்டரை சிஎஸ்கே மினி ஏலத்தில் எடுத்தாக வேண்டும். அது சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் என்றால் இன்னும் சூப்பர் எனலாம்.

IPL 2026 CSK: மிரட்டும் டோனோவன் ஃபெரீரா 

சிஎஸ்கேவின் (Chennai Super Kings) இந்த தேவைக்கு பொருத்தமான தேர்வாக டோனோவன் ஃபெரீரா (Donovan Ferreira) இருப்பார். வலது கை பேட்டர், ஆப் ஸ்பின் போடக்கூடியவர் என்பதை தாண்டி இவர் விக்கெட் கீப்பிங்கும் பார்ப்பார். சிஎஸ்கேவுக்கு ‘ஒரு கல்லுல மூணு மாங்கா’ கிடைத்துவிடும். மிடில் ஆர்டரில் ஒரு அதிரடி ஃபினிஷர் சிஎஸ்கேவுக்கு உறுதியாகிவிடுவார். பிராவோவுக்கு பின் அந்த இடத்தில் சரியான வீரர் சிஎஸ்கேவுக்கு கிடைக்கவில்லை. தற்போது அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட்  (MLC) தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (TSK) விளையாடி வருகிறார். அவர் 6 போட்டிகளில் 174 ரன்களை அடித்துள்ளார், 1 விக்கெட்டும் எடுத்திருக்கிறார்.

IPL 2026 CSK: 9 பந்துகளில் 37 ரன்கள் 

இன்று வாஷிங்டன் ஃபிரீடம் அணிக்கு எதிராக டிஎஸ்கே மோதியது. மழை பாதிக்கப்பட்டதால் போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்களை அடித்தது. அதில் ஃபெரீரா 9 பந்துகளில் 5 சிக்ஸர்கள் உள்பட 37 ரன்களை அடித்து மிரட்டினார். கடைசி 6 பந்துகளில் மட்டும் 4 சிக்ஸர்கள், 2 இரட்டை ரன்கள் என 28 ரன்களை குவித்து குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஏற்கெனவே MLC தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட டிஎஸ்கே, இதில் வென்று 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

IPL 2026 CSK: மினி ஏலத்தில் எடுக்குமா சிஎஸ்கே? 

தென்னாப்பிரிக்க லீக் தொடரான SA20-இல் ஜோகனஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் (JSK) அணிக்காக விளையாடும் டோனோவன் ஃபெரீரா 24 இன்னிங்ஸில் 452 ரன்களையும், 12 இன்னிங்ஸில் 11 விக்கெட்டை கைப்பற்றி உள்ளார். 26 வயதான டோனோவன் ஃபெரீரா தென்னாப்பிரிக்காவுக்காக 5 டி20ஐ இன்னிங்ஸில் 79 ரன்களை அடித்திருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளில் 2023, 2024 சீசன்களில் ராஜஸ்தான் அணியில் இருந்தார். 2025 மெகா ஏலத்தில் இவரை ரூ.75 லட்சத்திற்கு டெல்லி வாங்கியது. இவரை டெல்லி விடுவிக்கும்பட்சத்தில், நிச்சயம் வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே இவரை எடுக்க துடிக்கும். இருப்பினும் இவர் ஐபிஎல் தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை, பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. இவர் கிடைக்காவிட்டால் நியூசிலாந்தின் கிளென் பிளிப்ஸை கூட சிஎஸ்கே எடுக்கலாம். இதனால், ஜடேஜா – நூர் அகமதுடன் 3வது ஸ்பின்னரையும் சிஎஸ்கே விளையாடலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.