தன்னாட்சியை பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ சிறந்த எடுத்துக்காட்டு: அமித் ஷா

புனே: தன்னாட்சியை பாதுகாப்பதற்கான நாட்டின் உறுதிப்பாட்டுக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆபரேஷன் சிந்தூர் என அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

18-ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த மராட்டிய பேஷ்வா (பிரதம அமைச்சர்) முதலாம் பாஜிராவின் சிலையை மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் திறந்து வைத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பாஜிராவின் சிலையை நிறுவுவதற்கு மிகவும் பொருத்தமான இடம், இந்த தேசிய பாதுகாப்பு அகாடமி. ஏனெனில் இங்குதான் ராணுவத் தலைமைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

எதிர்மறை எண்ணங்கள் என் மனதில் தோன்றும்போதெல்லாம், நான் வழக்கமாக மராட்டிய மன்னராக விளங்கிய சிவாஜியையும், பேஷ்வா பாஜிராவையும் பற்றி நினைப்பேன். மிகவும் பாதகமான சூழல்களுக்கு மத்தியில் அவர்கள், இறையாண்மை மிக்க ஓர் அரசை இங்கே நிறுவினார்கள். அது அவர்களால் முடிந்தது. அதை நினைத்துப் பார்ப்பேன்.

தன்னாட்சியை நிறுவ போராட வேண்டிய நேரம் வந்தபோது, ​​நாம் அதைச் செய்தோம். தன்னாட்சியைப் பாதுகாக்க போராட வேண்டியிருக்கும் போது, ​​நமது படைகளும் நமது நாட்டின் தலைமையும் அதை நிரூபிக்கும். ஆபரேஷன் சிந்தூரும் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தன்னாட்சியை பாதுகாக்கும் பொறுப்பு இப்போது 140 கோடி இந்தியர்களிடம் உள்ளது.

சிவாஜி மகாராஜாவால் தொடங்கப்பட்டு, பேஷ்வாக்களால் 100 ஆண்டுகளாக முன்னெடுத்துச் செல்லப்பட்ட சுதந்திரப் போர் நடைபெற்று இருக்காவிட்டால், இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் போயிருக்கும். 1700 முதல் 1740 வரை, 40 ஆண்டுகளில் வேறு யாரும் படைக்க முடியாத அளவுக்கு அழியாத வரலாற்றைப் படைத்தவர் பேஷ்வா பாஜிராவ்” என்று தெரிவித்தார்.

18-ம் நூற்றாண்டில், தனது 19 வயதில் மராட்டிய மாநிலத்தின் ‘பேஷ்வா’-வாக பொறுப்பேற்ற பாஜிராவ், மத்திய மற்றும் வட இந்தியாவில் மராட்டிய ஆட்சியை விரிவுபடுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.