அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை

பியூனஸ் அயர்ஸ்: அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது அர்​ஜென்​டி​னா​வில் லித்​தி​யம் சுரங்​கங்​களை அமைப்​பது குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது.

பிரதமர் நரேந்​திர மோடி நேற்று அர்​ஜென்​டினா தலைநகர் பியூனஸ் அயர்​ஸுக்கு சென்​றார். விமான நிலை​யத்​தில் ஏராள​மான இந்​தி​யர்​கள், அவரை உற்​சாக​மாக வரவேற்​றனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “பியூனஸ் அயர்​ஸில் இந்​திய சமூகத்​தினரின் அன்​பான வரவேற்​பால் நெகிழ்ச்சி அடைந்​தேன். இந்​தி​யா​வில் இருந்து ஆயிரக்​கணக்​கான கி.மீ. தொலை​வில் வாழ்ந்​தா​லும் இந்​திய உணர்வு பிர​காச​மாக இருக்​கிறது. கலாச்​சார தொடர்​புக்கு தொலைவு ஒரு தடையல்ல. அர்​ஜென்​டினா உடனான உறவு​கள் மேம்​படுத்​தப்​படும். அதிபர் சேவியர் மிலேய் உடன் விரி​வான பேச்​சுவ​ார்த்தை நடத்த உள்​ளேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.

கடந்த 2018-ம் ஆண்​டில் அர்​ஜென்​டி​னா​வில் ஜி20 உச்சி மாநாடு நடை​பெற்​றது. அப்​போது அந்த நாட்டு அதிபர் மிலேயை பிரதமர் நரேந்​திர மோடி முதல்​முறை​யாக சந்​தித்​துப் பேசி​னார். அதன்பிறகு இரு நாடு​கள் இடையி​லான வர்த்தக உறவு வலு​வடைந்து வரு​கிறது.

தற்​போது 2-வது முறை​யாக அதிபர் சேவியர் மிலேயே பிரதமர் நரேந்​திர மோடி நேற்று சந்​தித்​துப் பேசி​னார். இந்த சந்​திப்​பின்​போது பாது​காப்​பு, விவ​சா​யம், சுரங்​கம், எண்​ணெய், எரி​வா​யு, மரபு​சாரா எரிசக்​தி, வர்த்​தகம், முதலீடு உட்பட பல்​வேறு துறை​களில் இரு நாடு​கள் இடையி​லான உறவை மேம்​படுத்​து​வது குறித்து விரி​வாக ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. குறிப்​பாக அர்​ஜென்​டி​னா​வில் லித்​தி​யம் சுரங்​கங்​களை அமைப்​பது தொடர்​பாக இரு தலை​வர்​களும் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

சர்​வ​தேச அளவில் சிலி, பொலி​வியா நாடு​களுக்கு அடுத்து அர்​ஜென்​டி​னா​வில் லித்​தி​யம் தனிமம் அதி​க​மாக உள்​ளது. அந்த நாட்​டில் லித்​தி​யம் சுரங்​கங்​களை அமைப்​பது தொடர்​பாக கடந்த பிப்​ர​வரி​யில் இரு நாடு​களிடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி அர்​ஜென்​டினா நாட்​டின் 5 இடங்​களில் மத்​திய அரசின் கேஏபிஐஎல் நிறு​வனம் சார்​பில் சுரங்​கங்​களை அமைக்க திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது.

தற்​போது வரை லித்​தி​யம் தேவைக்கு சீனாவையே இந்​தியா நம்​பி​யிருக்​கிறது. அர்​ஜென்​டி​னா​வில் லித்​தி​யம் சுரங்​கங்​களை அமைக்​கும்​போது, இந்​தி​யா​வின் மின்​சார வாகன நிறு​வனங்​களின் தேவையை முழு​மை​யாக பூர்த்தி செய்ய முடி​யும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் இருந்து பெட்​ரோலிய பொருட்​கள், இருசக்கர வாக​னங்​கள் அர்​ஜென்​டி​னா​வுக்கு அதிக அளவில் ஏற்​றுமதி செய்​யப்​படு​கிறது. அந்த நாட்​டில் இருந்து சோயாபீன் உள்​ளிட்ட வேளாண் பொருட்​கள் அதிக அளவில் இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. அர்​ஜென்​டி​னா​வின் சோயாபீன் எண்​ணெய் ஏற்​றும​தி​யில் சுமார் 95 சதவீதம் இந்​தி​யா​வுக்கு அனுப்​பப்​படு​கிறது.

தற்​போது அர்​ஜென்​டி​னா​வில் இருந்து லித்​தி​யத்தை அதிக அளவில் இறக்​குமதி செய்ய முடிவு செய்​யப்​பட்டு உள்​ளது. இதற்​காக அந்த நாட்​டில் இந்​திய அரசு நிறு​வனம் சார்​பில் லித்​தி​யம் சுரங்​கங்​கள் அமைக்​கப்பட உள்​ளன. மேலும் நிலக்​கரி, தாமிரம் உள்ளிட்ட தாதுக்​களை​யும் அதிக அளவில் இறக்​குமதி செய்ய திட்​ட​மிடப்​பட்டு இருக்​கிறது. இவ்​வாறு மத்​திய அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.

400 கி.மீ. கடந்து வந்த இந்தியர்: இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவிஜய் குமார் குப்தா, அர்ஜென்டினாவின் ரோசாரியா நகரில் பணியாற்றி வருகிறார். இது தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரதமர் மோடியை வரவேற்க 400 கி.மீ. தொலைவை கடந்து விஜய் குமார் குப்தா நேற்று பியூனஸ் அயர்ஸ் நகருக்கு சென்றார். அவர் கூறும்போது, “பிரதமர் மோடியுடன் கைகுலுக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு அது போதும்” என்று தெரிவித்தார்.

டிரினிடாட் நாட்டில் திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டில் முகாமிட்டிருந்தார். அப்போது அவருக்கு அந்த நாட்டின் மிக உயரிய, ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் & டொபாகோ என்ற விருதை அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்கலூ வழங்கினார். அவரது முன்னோர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். விழாவில் பிரதமர் மோடி பேசும்போது, “டிரினிடாட் அதிபர் கார்லா கங்கலூவின் முன்னோர் திருவள்ளுவர் பிறந்த மண்ணைச் சேர்ந்தவர்கள். சிறந்த ஆட்சி குறித்த 6 முக்கிய கொள்கைகளை அப்போதே திருவள்ளுவர் எடுத்துரைத்து உள்ளார்” என்று தெரிவித்தார்.

‘‘படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு’’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். வீரமிக்க படை, நாட்டுப்பற்றுமிக்க மக்கள், குறையாத செல்வம், நாட்டின் நலன் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் நட்பு, அழிக்க முடியாத காவல் ஆகிய 6 அம்சங்களே அரசுகளில் சிங்கம் போன்றது என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.