ஈரான்-இஸ்ரேல் போருக்கு பின் முதன்முறையாக பொதுமக்கள் முன் தோன்றிய காமேனி

தெஹ்ரான்,

காசா மீது ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் போர் தொடுத்து வரும் சூழலில், கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியது.

நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு என இஸ்ரேலின் 2 ராணுவ தளங்கள் உள்ளிட்ட பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, அதற்கு பதிலடி தரும் வகையில், ஈரான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில், ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ந்தேதி திடீரென தாக்குதலில் ஈடுபட்டது. ஈரானில் அணுசக்தி நிலையங்கள் அமைந்த நடான்ஸ் மற்றும் இஸ்பாஹன் ஆகிய இடங்கள் மற்றும் ஏவுகணை தளங்கள் அமைந்த தப்ரீஸ் மற்றும் கெர்மன்ஷா மற்றும் தெஹ்ரான் நகரில் உள்ள கட்டுப்பாட்டு மையங்கள் உள்பட 100-ககும் மேற்பட்ட இடங்களை இலக்காக கொண்டு, ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுடன், அமெரிக்காவும் இணைந்து கொண்டது. இதில், ஈரானின் 3 முக்கிய அணு உலைகளை இலக்காக கொண்டு அமெரிக்கா தாக்கியது. எனினும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்பே எடுத்து விட்டோம் என ஈரான் பதிலளித்தது.

ஆனால், அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது என ஈரான் எச்சரித்தது. தொடர்ந்து பதில் தாக்குதலையும் தீவிரப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் படைகள் நிறுத்தப்பட்ட நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்கியது. இதில் கத்தார் நாடும் தாக்கப்பட்டது.

எனினும், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே 12 நாட்கள் போர் நடந்து, அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அது முடிவுக்கு வந்தது. போரின்போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி பாதுகாப்பான பகுதிக்கு சென்று விட்டார். பதுங்கு குழியில் அவர் தங்கி விட்டார் என தகவல்கள் பரவின. ஆனால், அதனை அந்நாட்டு ஊடகம் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், இந்த போருக்கு பின்னர் காமேனி முதன்முறையாக வெளியே தோன்றும் காட்சிகள் வெளியாகி உள்ளன. தெஹ்ரானில் உள்ள அவருடைய அலுவலகம் மற்றும் வீடுக்கு அருகே மசூதி ஒன்றிற்குள் நுழைந்து அமரும் காட்சியை ஈரானின் தொலைக்காட்சி வெளியிட்டு உள்ளது.

அவர் கூட்டத்தினரை நோக்கி கையசைத்தும், கோஷம் எழுப்பிய மக்களை நோக்கி தலையாட்டியபடியும் சென்றார். அப்போது, அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட பலரும் அவருடன் இருந்தனர். எனினும், அவர் பொதுமக்களுக்கு அறிக்கை விட்டது பற்றியோ வேறு எந்தவித தகவலோ உடனடியாக வெளிவரவில்லை.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் அதிக பாதுகாப்புடனேயே நடைபெறுவது வழக்கம். போரின்போது, காமேனி எந்த பகுதியில் இருக்கிறார் என்ற விவரம் எங்களுக்கு தெரியும். ஆனால், அவரை கொல்லும் திட்டம் எதுவும் இல்லை என டிரம்ப் அப்போது சமூக ஊடகங்களின் வழியாக எச்சரிக்கை தகவலையும் வெளியிட்டார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.