கீழடி விவகாரத்தில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை: சகாயம் விமர்சனம்

நாமக்கல்: கீழடி விவகாரத்தில் மாற்றாந்தாய் மனப்பாங்கோடு நடந்து கொண்டு வரலாற்றை மறைப்பதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் எழுதிய ‘கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை’ எனும் நூல் வெளியீட்டு விழா நாமக்கல் அருகே லத்துவாடியில் நடைபெற்றது. இதில் சகாயம் கலந்து கொண்டு பேசினார். விழாவைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற லாக்கப் மரணம் எந்த சூழலிலும் ஏற்றுக் கொள்ளமுடியாதது. காவல் துறையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மக்களை பாதுகாக்கத்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். இதில் தமிழக முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காவல் துறையினர் அத்துமீறிய செயலை மட்டுப்படுத்த வேண்டும். இதில் கவனம் செலுத்தவில்லையெனில் ஆட்சிக்கு பெரிய அவப்பெயர் வந்துவிடும். தமிழ் மொழி உலகில் உள்ள மூத்த மொழிகளில் ஒன்று.

வட மொழிக்கு அளிக்கும் நிதி உயர்வாக இருக்கும்போது அதில் பாதி கூட தமிழுக்கு நிதி ஒதுக்காததை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே வட மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கும் நிதியைக் காட்டிலும் கூடுதல் நிதியை தமிழ் மொழிக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும். தேர்தலை தாண்டி சிந்திப்பது தான் தமிழகத்தின் இன்றைய தேவையாகும். இதன்படி நாங்கள் தேர்தல் அரசியலை தாண்டி தான் சிந்திக்கிறோம். தேர்தலை மிக செலவினமானதாக ஆக்கிவிட்டனர்.

தமிழர்களின் வரலாறு தொன்மையானது. அதன் மகத்தான வெளிப்பாடு தான் கீழடியில் கிடைக்கக்கூடிய வரலாற்று செல்வங்கள். அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.மாற்றாந்தாய் மனப்பாங்கோடு நடந்து கொண்டு வரலாற்றை மறைப்பதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தமிழர்கள் ஏற்கனவே விழிப்புணர்வு உடையவர்கள். எனவே மாற்றாந்தாய் மனப்பாங்கோடு நடப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது” இவ்வாறு சகாயம் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.