மாங்கனி திருவிழா: காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

காரைக்கால்:

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் மாங்கனி திருவிழா நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று காலை பரமதத்தருக்கும், காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்வான மாங்கனி இறைத்தல் நாளை (10.7.2025) நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு சிவபெருமான் பிச்சாடனர் கோலத்தில் வீதி உலா வரும்போது பொதுமக்கள் தங்களின் வீடுகளின் மாடியில் அல்லது பால்கனியில் அருந்து மாங்கனிகளை பிச்சாடனரை நோக்கி வீசுவார்கள். கீழே நிற்கும் பக்தர்கள் அந்த மங்கனிகளை பிடித்து பிரசாதமாக உட்கொள்வார்கள்.

மாங்கனி திருவிழாவை முன்னிட்டு காரைக்காலில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி உள்துறை அமைச்சரும் கல்வித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காரைக்கால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி விழாவைக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு மாம்பழங்களை பொழியும் மங்களகரமான நிகழ்வு 10.07.2025 (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுடன், அருள்மிகு காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழாவைக் கொண்டாடுவதற்காக காரைக்கால் பகுதிக்கு 10.07.2025 அன்று உள்ளூர் விடுமுறை (அரசு அலுவலகங்கள்/நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்) அறிவிக்கப்படுகிறது. அதற்கு ஈடு செய்யும் வேலை நாளாக 19.07.2025 (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.